Aran Sei

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்குப் பதில் அரசியலை விட்டே விலகிவிடுவேன் – மாயாவதி

பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இரண்டுகட்சிகளின் கொள்கைகளும் எதிர் எதிரானது என்று கூறியுள்ள மாயாவதி, சட்டப்பேரவைத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் மாநிலங்களவை மற்றும் உத்தரப் பிரதேச மேலவை தேர்தல்களில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்க பாஜக உட்பட எந்தக் கட்சிக்கும் ஆதரவாக வாக்களிப்போம் என்று மாயாவதி கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மாயாவதி விளக்கமளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு, இஸ்லாமியர்களின் ஆதரவைத் தடுப்பதற்குத் தன்னுடைய அறிக்கையை சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் திரித்துக் கூறி வருவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

“எதிர்காலத்தில் எந்த ஒரு தேர்தலிலும் பாஜக, பகுஜன் சமாஜ் கூட்டணி சாத்தியமில்லை. பகுஜன் சமாஜ் கட்சி மதவாதக் கட்சியுடன் இணைந்து போட்டியிடாது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மாயாவதி தெரிவித்துள்ளார்.

“பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கை ’அனைவருக்கும் மற்றும் அனைத்து மதத்தினருக்கும் நலன்செய்ய வேண்டும்’ என்பதே. இது பாஜகவின் கொள்கைக்கு எதிரான” என்றும் “சாதியவாத, மதவாத மற்றும் முதலாளித்துவக் கொள்கை  உடையவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சேராது” என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்குப் பதில் அரசியலை விட்டே விலகிவிடுவேன் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். “மதவாத, சாதிய மற்றும் முதலாளித்துவச் சக்திகளை அனைத்துத் தளங்களிலும் எதிர்ப்போம். யாருக்கும் வளைந்துகொடுக்க மாட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி வேட்பாளரைத் தோற்கடிப்பது குறித்து தான் ஏற்கனவே கூறியதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ள மாயாவதி “சமாஜ்வாதி வேட்பாளரைத் தோற்படிப்பதற்குப் பாஜக உட்பட எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

“பகுஜன் சமாஜ் கொள்கை சார்ந்த கட்சி மற்றும் இயக்கம். பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தபோதும் கூட அதை நான் விட்டுக்கொடுத்ததில்லை” என்று மாயாவதி கூறியுள்ளார். மேலும்,  “ஆட்சியைக் கூட இழந்திருக்கிறேன். ஆனால், இஸ்லாமியர்களுக்கு எந்தத் துன்பத்தையும் கொடுத்ததில்லை” என்று கூறியுள்ளார்.

”என்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்து, முஸ்லிம் கலவரம் நடந்ததில்லை. வரலாறே அதற்குச் சாட்சி. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பல இந்து, முஸ்லிம் கலவரங்கள் நடந்துள்ளன” என்று கூறியுள்ள மாயாவதி, தன்னுடைய ஆட்சியல் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டதாகவும், தற்போதைய இடைத்தேர்தலில் இரண்டு இஸ்லாமியர்களுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்