Aran Sei

நடிகர் அமிதாப் பச்சனை துரத்தும் மனுஸ்மிருதி சர்ச்சை – திருமாவளவன் கடும் கண்டனம்

credits : scroll

னுஸ்மிருதியில் உள்ளதை சுட்டிக்காட்டி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் இதே வேளையில் வட இந்தியாவில் மனுஸ்மிருதியை அவமதித்தாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

கவுன் பனேகா க்ரோர்பதி (கோடீஸ்வரன்) இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியும், அது குறித்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அமிதாப் பச்சனின் பேச்சும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான கவுன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) அல்லது கோடீஸ்வரன் நிகழ்ச்சியை கடந்த 20 வருடங்களாக நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் இந்நிகழ்ச்சியின் 12-வது சீஸன் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியும், அது குறித்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அமிதாப் பச்சனின் பேச்சும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அனுப் சோனி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். அதில்  ரூ 6.40 லட்சம் ரூபாய்க்கான கேள்வியாக “25 டிசம்பர் 1927-ல் டாக்டர் அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்தப் புனித நூலின் பிரதிகளை எரித்தார்கள்” என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கான விடைகளாக விஷ்ணு புராணம், பகவத் கீதை, ரிக்வேதம், மனுஸ்மிருதி ஆகியவை கொடுக்கப்பட்டன.

பின்னர் அமிதாப் பச்சன், இந்தக் கேள்விக்கான பதில் குறித்து பேசும்போது ”1927-ல் அம்பேத்கர், மனிதர்களிடையே நிலவி வந்த சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் நியாயப்படுத்திய இந்துக்களின் பழமையான நூலான மனுஸ்மிருதியை எரித்தார்” என தெரிவித்துள்ளார்.

இந்தக் காணொலி  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வலதுசாரிகள் அமிதாப் பச்சனை கடுமையாக எதிர்த்து  வருகின்றனர்.

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக அமிதாப் பச்சன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யு பவார். அவர் அளித்துள்ள புகாரில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட  கேள்விக்கு, பதில்களாக (options) கொடுக்கப்பட நான்குமே இந்துக்களின் நூல்கள் தான். இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தவே இது போன்ற கேள்விகள் வைத்தாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி ”இந்துக்களின் புனித நூல்கள் எல்லாவற்றையும் எரிக்க வேண்டும்” என்ற தவறான உதாரணத்தை பரப்புவதாக கூறியுள்ளார். இணக்கமாக இருக்கும் இந்துக்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே பகையுணர்வை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.

ஹேட் ஸ்டோரி, தாஷ்கண்ட் ஃபைல்ஸ் போன்ற படங்களை எடுத்த பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி “கோடீஸ்வரன் நிகழ்ச்சி கம்யுனிஸ்டுகளின் கூடாரமாக மாறிவிட்டது” என்றும் “இது ஒரு கலாச்சார யுத்தம்” என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அரண்செய்-யிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்த நிகழ்வை குறிப்பிட்டு அமிதாப்பாச்சனுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளர். அத்துடன், நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்த விவகாரத்தில் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்