Aran Sei

திகார் சிறையிலும் குலையாத விவசாயிகளின் போராட்ட உறுதி – பத்திரிகையாளர் மன்தீப் புனியா

Image Credit : caravanmagazine.in

மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் மன்தீப் சிங் புனியா, திகார் சிறையில் தான் சந்தித்த விவசாயிகள் பற்றிய செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சிங்கு எல்லையில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் – 14 நாள் நீதிமன்ற காவல்

ஜனவரி 26-ம் தேதி விவசாயிகள் நடத்திய குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது ஒரு பிரிவில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக போலீஸ் 13 முதல் தகவல் அறிக்கைகளின் கீழ் 120க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது. அவர்களில் பலர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் குடியரசு தின பேரணியில் நடந்தது என்ன? – ஊடகங்களின் பிரச்சாரம் உண்மையா?

சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்த போது ஜனவரி 30-ம் தேதி மன்தீப் புனியாவை போலீஸ் கைது செய்தது.

தான் கைது செய்யப்பட்டது தொடர்பாக, “ஜனவரி 29-ம் தேதி வலதுசாரி குண்டர்கள் சிங்கு போராட்டக் களத்தை தாக்கினர். போலீசும், பாதுகாப்புப் படைகளும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கும்பல் போராடும் விவசாயிகள் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசுவதை நான் பார்த்தேன். நான் கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள், இந்தக் கும்பல் ஆளும் பாஜகவுடன் தொடர்புடையது என்று நான் செய்தி வெளியிட்டிருந்தேன்” என்று மன்தீப் புனியா தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, மன்தீப் மீதும் போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. “நான் ஒரு பத்திரிகையாளர் என்று நன்கு தெரிந்திருந்தும் என்னை போராட்டக்காரர் என்று போலீஸ் வகைப்படுத்தியது” என்று கேரவன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

“காவல்துறையினர் என்னை கடுமையாக தாக்கினர்” – பத்திரிகையாளர் மந்தீப் புனியா குற்றச்சாட்டு

திகார் சிறையில் மன்தீப் புனியா வைக்கப்பட்டிருந்த பிரிவில், J, K, L, M, N ஆகிய எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயருடையவர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று அவர் கூறியுள்ளார். தான் சந்தித்த அனைத்து விவசாயிகளும் 5 முதல் 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகள். அவர்கள் தொலைதூர கிராமங்களில் இருந்து வந்திருந்தார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு

Image Credit : thehindu.com
Image Credit : thehindu.com

தான் பேசிய விவசாயிகள் பற்றிய விபரங்களை தனது காலில் எழுதி வைத்து, தான் பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளளார், மன்தீப் புனியா.

1. பஞ்சாபின் பெர்ரோன் கிராமத்தைச் சேர்ந்த, 43 வயதான ஜஸ்மிந்தர் சிங்

“எங்களை சிறையில் தள்ளுவதன் மூலம் எங்கள் உறுதியை குலைத்து விடலாம் என்று மோடி அரசு நினைக்கிறதா? அவர்கள் தவறு செய்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் வரலாறு தெரியாது. இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் திரும்ப மாட்டோம்” என்று ஜஸ்மிந்தர் சிங் கூறியுள்ளார்.

ஜனவரி 29-ம் தேதி, ஜஸ்மிந்தரும் சுமார் 30 பிற விவசாயிகளும், சிங்கு எல்லைக்கு அருகில் உள்ள நரேலாவுக்குச் சென்று காய்கறிகளும் பிற பொருட்கனையும் வாங்கிக் கொண்டு திரும்பும் போது, “போலீஸ் எங்களை கம்புகளால் தாக்கியது. எங்கள் எல்லோரையும் பேருந்தில் ஏற்றிக் கொண்டு போய், மருத்துவ பரிசோதனை செய்த பிறகு திகார் சிறையில் அடைத்து விட்டனர்” என்று அவர் கூறியுள்ளார்.

2. ஹரியானாவின் தோஹானா வட்டத்தைச் சேர்ந்த ஹிமத்புரா கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான மல்கித் சிங்

“நாங்கள் பேசிய போது அவரது முகத்தில் பயமும் நம்பிக்கையும் குழப்பமாக தெரிந்தன” என்று மன்தீப் புனியா கூறுகிறார்.

“அது பயமில்லை, கவலை மட்டுமே. எங்கள் மீது எந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள், ஏன் அந்தப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்” என்று தெரியவில்லை என்று மல்கித் சிங் கூறியுள்ளார்.

3. பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெஹ்லா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்ஸி

இவர் பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா-உக்ரஹான்)-ஐச் சேர்ந்தவர். இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திக்ரி எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

“விவசாயிகள் மீது அரசு ஒடுக்குமுறையை முன்னரும் நான் பார்த்துள்ளேன்” என்று அவர் கூறுகிறார். “பஞ்சாப் விவசாய சமுதாயம் வலுவான போராட்டத் திறன் கொண்டது. நாங்கள் புரட்சிகர அலையின் வாரிசுகள்” என்று கூறியுள்ளார் அவர்.

“விவசாயிகள் கைதைக் கண்டு அஞ்சவில்லை என்று அரசாங்கத்துக்குத் தெரிய வேண்டும். எங்களது தைரியம் மலையை விடப் பெரியது. இந்த அரசாங்கத்தால் எங்கள் மன உறுதியை உடைக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

4. ஹரியானாவின் பனியானி கிராமத்தைச் சேர்ந்த குருத்வாராவில் கிராந்தியாக உள்ள, 70 வயதான பாபா ஜீத் சிங்

டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகளுக்கான லங்கர் சேவை வழங்கி வந்தவர் பாபா ஜீத் சிங். சென்ற நவம்பர் மாதம் விவசாயிகள் போராட்டத்தை புராரி மைதானத்துக்கு மாற்றிக் கொள்ளும்படி அரசு கூறிய போது சில விவசாயிகள் அங்கு சென்றிருந்தனர். ஜனவரி இறுதியில் போலீஸ் சில போராட்டக்காரர்களை இடத்தை காலி செய்ய வைத்து, மற்றவர்களை கைது செய்தது.

“எங்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டோம்” என்கிறார் பாபா ஜீத் சிங். ஆனால், அவர் சோர்வாக இல்லை. தனது நீண்ட வெள்ளை தாடியை தடவியபடியே அவர் எளிதாக சிரிக்கிறார் என்று மன்தீப் புனியா பதிவு செய்கிறார்.

5. ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தைச் சேர்ந்த ரித்தால் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ஜக்பீர் சிங்

போலீஸ் தன்னை பீராகதி மெட்ரோ நிலையத்துக்கு அருகில் கைது செய்ததாக ஜக்பீர் சிங் கூறியுள்ளார். “நான் ராஜேந்திரா பிளேசில் உள்ள எனது சகோதரர் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் நான் கைது செய்யப்பட்டேன். என்னுடைய ஆதார் கார்டை பார்த்த பிறகு என்னை விட்டு விடுவதாக அவர்கள் கூறினர். ஆனால், அவர்கள் என்னை திகாரில் அடைத்து விட்டனர்” என்கிறார் அவர்.

“விவசாயிகள் போராட்டத்தின் பெயரில்” ஜிண்ட்-ஐச் சேர்ந்த ஒரு இளைஞரும் தன்னுடன் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

6. நரேந்திர குப்தா, டெல்லி

“நான் டெல்லிவாசி, விவசாயி கூட இல்லை. நான் அமைதியாக என் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். என்னை போலீஸ் கைது செய்தது. நான் விவசாயி இல்லை என்று சொன்னதை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் பிப்ரவரி 3-ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

“நான் சந்தித்த விவசாயிகள் தமது குடும்பங்களின் தொலைபேசி எண்களை கொடுத்தனர். நான் வெளியே போன பிறகு அவர்கள் உறுதி குலையாமல் இருப்பதாக அவர்களது குடும்பங்களுக்கு உறுதி அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.” என்று மன்தீப் புனியா  எழுதியுள்ளார்.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேரா பாபா நானக் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயிகள் மன்தீப் புனியாவின் சிறை பிரிவுக்கு அருகில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள், ஒரு நாளில் பலமுறை, விவசாயிகள் போராட்டத்தோடு தொடர்புடைய பஞ்சாபி நாட்டுப் புற பாடல்களை பாடினர் என்கிறார் மன்தீப் புனியா.

பாடல்களை பாடிய பிறகு, “கிசான் ஏக்தா ஜிந்தாபாத் (விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக)” என்று  அவர்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து, “ஓங்குக, ஓங்குக” என்று சுற்றி உள்ள சிறை பிரிவுகளில் இருந்த விவசாயிகள் முழக்கமிட்டனர் என்று மன்தீப் புனியா பதிவு செய்துள்ளார்.

“பாடல்களையும், முழக்கங்களையும் பதிவு செய்வதற்கான கருவிகள் சிறையில் இல்லை, இருந்தாலும் அந்த பாடல்களையும் முழக்கங்களையும் இன்னும் நான் கேட்க முடிகிறது” என்று மன்தீப் புனியா தனது செய்தி அறிக்கையில் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்