மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியின் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளுடன் தொலைபேசியில் பேசி, அவர்களது போராட்டத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்ட நேற்று (டிசம்பர் 23) திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று டெல்லிக்குச் சென்று விவசாயிகளை சந்தித்ததாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. இந்தக் குழுவில் டெரிக் ஓபிரையன், சதாப்தி ராய், பிரசூன் பானர்ஜி, பிரதிமா மொண்டல், முகமது நதிமூல் ஹக் ஆகியோர் இருந்தனர்.
“சிறு குழுக்களில் இருந்த பல விவசாயிகள் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசினர். விவசாயிகள் இயக்கத்துக்கு தனது முழு ஆதரவையும் மம்தா பானர்ஜி அவர்களிடம் தெரிவித்தார். போராட்டக் களத்துக்கு வரும்படி சில விவசாயிகள் அவரை அழைத்தனர்” என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் கள்ளச் சந்தைக்கு வழிவகுத்துள்ளது – மம்தா பானர்ஜி
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, ஒன்றிய அரசின் மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்த நாட்டுக்கும் உணவளிக்கும் விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவது துரதிர்ஷ்டமானது என்று மம்தா பானர்ஜி தொலைபேசி உரையாடலில் கூறியதாக என்டிடிவி தெரிவிக்கிறது.
“இங்கு வந்து எங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அது எங்களுக்கு பலத்தைக் கொடுக்கும் என்று ஒரு விவசாயி மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் கூறினார்.” என்று டெரிக் ஓபிரையன் ட்வீட் செய்துள்ளார்.
"Please come & join our dharna it will give us more strength" said a farmer on the phone to @MamataOfficial. A 5 member delegation of @AITCofficial MPs visited Singhu border again to express solidarity with protesting farmers. Bengal CM spoke to multiple groups #KisanDiwas
VIDEO pic.twitter.com/p4Kv7q2tAF— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 23, 2020
“#விவசாயிகள் தினத்தன்று வங்காள முதல்வர் பல குழுக்களுடன் பேசினார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பேசும் ஒரு வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.
டிசம்பர் 4-ம் தேதியும் மம்தா பானர்ஜி போராட்டக் களத்துக்கு ஒரு குழுவை அனுப்பியதோடு விவசாயிகளோடு தொலைபேசியில் பேசியதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. மம்தா பானர்ஜியும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களும் விவசாயச் சட்டங்களை எதிர்த்து கொல்கத்தாவில் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.