Aran Sei

’என்னை நோக்கி துப்பாக்கியை காட்டினால், என்னுள் இருக்கும் ஆயுதகிடங்கையே உங்களுக்கு காட்டுவேன்’ – மம்தா பானர்ஜி

ரண்டு நாட்கள் முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் 124 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டு, நேதாஜியை பாஜக அவமதித்திருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (ஜனவரி 25) மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி மாவட்டத்தின் புர்சுரா பகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

அப்போது பேசியவர், “நான் அவர்கள் (பாஜக) ஏற்பாடு செய்திருந்த நிகழ்சிக்கு சென்றேன். ஆக்ரோஷமாகவும் வெறித்தனமாகவும் சில துரோகிகள் பிரதமருக்கு முன்னால் என்னை கிண்டல் செய்ய முயற்சித்தனர். அவர்களுக்கு என்னை பற்றி தெரியாது. நீங்கள் என்னை நோக்கி துப்பாக்கியைக் காட்டினால், நான் என்னுள் இருக்கும் ஆயுத கிடங்கையே உங்களுக்கு காட்டுவேன். ஆனால் எனக்கு துப்பாக்கி வழியிலான அரசியலைப் பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லை.” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், “நீங்கள் யாரையாவது உங்கள் வீட்டிற்கு அழைத்து அவமானப்படுத்துவீர்களா? இது வங்கத்தின் பண்பாடா அல்லது நம் நாட்டின் பண்பாடா? நேதாஜியைப் புகழும் வகையிலான முழக்கங்கள் எழுப்பப்பட்டிருந்தால், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. என்னை கேவலப்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடனேயே, நிகழ்ச்சிக்கு எந்த தொடர்பும் இல்லாத முழக்கங்களை எழுப்பினார்கள். நாட்டின் பிரதமர் முன் நான் அவமானப்படுத்தப்பட்டேன். இதுதான் அவர்களின் (பாஜக) பண்பாடு.” என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கம் – லெனின் சிலையை திறந்து வைத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ

வங்காளத்தின் அடையாளங்களான ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி, பிர்சா முண்டா மற்றும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் ஆகியோரை பாஜக அவமதித்ததாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, “நீங்கள் (பாஜக) நேதாஜியை அவமதித்தீர்கள். தாகூரின் பிறப்பிடத்தை தவறாக சொன்னீர்கள். வித்யாசாகரின் சிலையை அழித்தீர்கள். பிர்சா முண்டா என்று நினைத்து வேறு சிலைக்கு மாலை அணிவித்தீர்கள்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்