Aran Sei

வேட்புமனு தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி காயமடைந்து மருத்துவமனையில் – சதித்திட்டம் என்று குற்றச்சாட்டு

Image credit : twitter feed

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எலும்பு காயங்களுடன் கொல்கத்தாவில் உள்ள IPGMER & SSKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அந்தப் பகுதியில் பிரச்சாரத்தின் போது, யாரோ சிலர் தள்ளி விட்டதன் காரணமாக காயம் அடைந்ததாகவும் தனக்கு எதிரான சதி நடக்கிறது என்றும் 66 வயதான மமதா பானர்ஜி கூறியதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது.

மமதா பானர்ஜி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொல்கத்தாவின் SSKM மருத்துவமனையின் மருத்துவர் எம் பண்டோபாத்யா, “ஆரம்ப கட்ட பரிசோதனைகளில் அவரது இடது கால் மூட்டில் கடும் காயங்கள் இருப்பதாகவும், வலது தோளிலும் கையிலும், கழுத்திலும் காயங்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்துக்குப் பிறகு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். அவர் 48 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.

“அவர் இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று பலர் விரும்பினார்கள். அவர்களது பாதையில் இருந்து அவரை நீக்க விரும்பினார்கள். அதனால்தான் அவர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்று மாநில அமைச்சரும் மூத்த திரிணாமூல் தலைவருமான சுப்ரதா முகர்ஜி கூறியுள்ளார்.

294 உறுப்பினர்கள் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தல், வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2011 சட்டப் பேரவை தேர்தலில் 35 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த இடதுசாரி கூட்டணியை தோற்கடித்து மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 2016-ல் நடந்த தேர்தலிலும் 211 தொகுதிகளில் வென்ற திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது.

கூட்டணி அமைத்துபோட்டியிட்ட காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் இடதுசாரி கட்சியினர் 33 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக, கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன.

ஆனால், 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது, அதன் வாக்கு சதவீதம் சுமார் 10%-லிருந்து கணிசமாக அதிகரித்து 40%-ஐ எட்டியது. திரிணாமூல் காங்கிரஸ் 22 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் உட்பட பல அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜகவின் தலைவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நந்திகிராம் பகுதியைச் சேர்ந்த சுவந்து அதிகாரி திரிணாமூல் கட்சியின் மூத்த அமைச்சர் ஆவார். அவர் கட்சி மாறி பாஜகவில் இணைந்தார். நந்திகிராமில் போட்டியிடுமாறு மம்தா பானர்ஜிக்கு சவால் விடுக்கவும் செய்தார்.

நந்திகிராமில் தொழில் பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கைப்பற்றும் இடது சாரி அரசுக்கு எதிராக, 2007-ம் ஆண்டில் தீவிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டங்களுக்கு மம்தா பானர்ஜி தலைமை வகித்து இடதுசாரி அரசாங்கத்துக்கு கடும் சவால் விடுத்து அடுத்து நடந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 291 தொகுதிகளிலும் கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா 3 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பாஜக மற்றும் 6 சிறு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் 92 இடங்களிலும், சிபிஐ(எம்) 130 தொகுதிகளிலும், இந்தியன் மதச்சார்பற்ற முன்னணி 37 இடங்களிலும், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் 15 இடங்களிலும் புரட்சிகர சோசலிசக் கட்சி 11 இடங்களிலும், சிபிஐ 9 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

மம்தா பானர்ஜி, சென்ற தேர்தலில் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியிலிருந்து மாறி, ஏப்ரல் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து, நந்திகிராமின் ஹல்தியாவில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு அந்தப் பகுதியில் பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்த மமதா பானர்ஜி ஒரு கோயிலின் முன்பு காரிலிருந்து இறங்கும் போது ஒரு சில நபர்கள் கார் கதவை அவர் மீது அடித்து சாத்தி அவரது காலிலும், தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

“நான் கதவு திறந்திருந்த காருக்கு வெளியில் நின்றிருந்தேன். ஒரு கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யவிருந்தேன். சிலர் என் காருக்கு அருகில் வந்து கதவை தள்ளி விட்டனர். கதவு எனது காலைத் தாக்கியது” என்று அவர் கூறியதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது.

முதலமைச்சர் மமதா பானர்ஜி தனது கால் வீங்கி விட்டதாகவும், தான் காய்ச்சலாக உணர்வதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும் கூறியதை அடுத்து அவரது பாதுகாப்பு படையினர் அவரை தூக்கிச் சென்று காரில் ஏற்றினர் என்று இந்தியா டுடே கூறுகிறது.

நேற்று இரவே கொல்கத்தாவுக்குக் கொண்டு வரப்பட்ட அவர் SSKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், மாநில அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, ஃபிர்ஹாத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

மமதா பானர்ஜி மருத்துவமனை படுக்கையில் இருக்கும் படத்தை அபிஷேக் பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

“பெங்கால் மக்களின் சக்தியை மே 2-ம் தேதி பார்க்கத் தயாராகுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மே 2 தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி ஆகும்.

மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தாங்கர் மருத்துவமனைக்கு வந்த போது திரிணாமூல் ஆதரவாளர்கள் “திரும்பிப் போ” என்ற முழக்கம் எழுப்பியதாக இந்தியா டுடே கூறுகிறது.

“மமதா பானர்ஜியை ஒழித்துக் கட்டுவதற்கான முதல் முயற்சி இல்லை இது. முன்பும் இதே வரலாற்று மண்ணில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய போது அவர் தாக்கப்பட்டார்” என்று திரிணாமூல் காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.

“ஆனால், எதுவும் அவரது உறுதியை குலைத்து விடாது, அவர் உங்களது உறுதியான குரலாக இருந்தார், இருக்கிறார், இருப்பார்” என்றும் அது கூறியுள்ளது.

மமதா பானர்ஜி, ஒரு சாதாரண நிகழ்வை சதித்திட்டம் என்று மாற்ற முயற்சிக்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

“அனுதாபத்தை ஈட்டுவதற்கான இத்தகைய முயற்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விஷயம் சிபிஐ விசாரணைக்கு தரப்பட வேண்டும் என்று கருதுகிறேன்” என்று பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, நந்திகிராமின் சிபிஎம் வேட்பாளர் மினாக்ஷி முகர்ஜி ஆகியோரும் இது அனுதாபம் தேடுவதற்கான நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

“போலீஸ் துறை அமைச்சரான முதலமைச்சருக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை என்று நம்ப முடிகிறதா” என்று அதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்