Aran Sei

போராடும் விவசாயிகளை தேச விரோதிகள் என்பதா – பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்

சிங்கு எல்லையில் விவசாயிகள் - Image Credit : Indian Today

போராடும் விவசாயிகள் மீது அவதூறு செய்யும் பாஜக தலைவர்களை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வன்மையாகக் கண்டித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பீகாரில் விவசாயிகள் மத்தியில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “துக்டே துக்டே கேங்” என்ற பெயரைப் பயன்படுத்தி அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ எதிர்த்தவர்கள், புதிய குடியுரிமைச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்தவர்கள், ராமர் கோயிலை எதிர்த்த அதே நபர்கள்தான் விவசாயச் சட்டங்களை எதிர்ப்பவர்கள் என்று ஒன்றிய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.

” விவசாயிகள் போராட்டத்தில் சீனா, பாகிஸ்தான் தூண்டுதல் என்று சொல்வதா! ” – பாஜக அமைச்சருக்கு கண்டனம்

நேற்று, துணை முதலமைச்சர் அஜித் பவார் உடன் சேர்ந்து நடத்திய ஓர் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய உத்தவ் தாக்கரே, “போராடும் விவசாயிகள் இடதுசாரிகளா, பாகிஸ்தானியர்களா அல்லது சீனாவிலிருந்து வந்தவர்களா” என்று பாஜக தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

“விவசாயிகள் இந்தக் குளிர் காலத்தில் இரவும் பகலும் போராடுகிறார்கள், சாலைகளிலேயே தூங்குகிறார்கள்.” என்று சுட்டிக் காட்டியுள்ள அவர், பாஜக தலைவர்கள் விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

போராடும் விவசாயிகளுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, அவர்களை “பாகிஸ்தானியர்கள்”, “தேச விரோதிகள்” என்று பாஜக தலைவர்கள் பழி சுமத்துகிறார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக அவர்களை பாகிஸ்தானி, தேச விரோதிகள் என்று அழைக்கிறார்கள். பாஜகவினர் பாகிஸ்தானிலிருந்து சர்க்கரையும், வெங்காயமும் இறக்குமதி செய்தார்கள், இப்போது விவசாயிகளையும் பாகிஸ்தானிலிருந்து கொண்டுவருகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

“தொழிலாளர்கள் சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் பேசும் யாரும் தேச விரோதிகளா? பாஜக தலைவர்களுக்கு விவசாயச் சட்டங்கள் பற்றி நன்கு தெரிந்திருந்தால் அவர்கள் ஏன் விவசாயிகள் போராடும் இடத்துக்குச் சென்று அவர்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. ஏன் தொலைக்காட்சி கேமராக்கள் முன்பு மட்டும் பேசுகிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நமது விவசாயிகளைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துபவர்கள் மனிதர்களே இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாரூர், ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

“விவசாயிகளுக்கு அரசு உறுதிமொழிகளைத் தர வேண்டும். விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றனர். அரசு இந்தச் சட்டங்களின் செயல்பாட்டை நிறுத்திவைத்து, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 3-வது வாரத்தில் கூட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தொடர்புடையவர்களுடன் ஆலோசனை நடத்தாமலே முடிவுகள் எடுக்கும் இந்திய அரசின் பிடிவாதம் தோல்வியை எதிர்கொள்கிறது என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்