Aran Sei

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தரவுகளை வெளியிடுக: உயர்நீதிமன்றம் உத்திரவு

photo credit: reuters

பொது முடக்க காலத்தில் சொந்த மாநிலத்துக்கு செல்லும் வழியில் மரணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் 400 தமிழ் கூலித்தொழிலாளர்களை மீட்க ஆட்கொணர்வு மனுவை மே மாதம் வழக்குறைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் பகுதியாக மத்திய அரசையும் தமிழ்நாடு அரசையும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு சேர்த்துக்கொண்டது.

நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மத்திய அரசிடம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய தரவுகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் எப்படி கூற முடியும். மத்திய அரசு மாநில அரசுகளிடமிருந்து தரவுகளை வாங்கியிருக்கலாமே என கூடுதல் தலைமை வழக்குறைஞர் ஆர்.சங்கரநாராயணனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி நீதிமன்றத்துக்கு இருக்கும் அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது. மரணமடைந்த புலம்பெயர் தொழிலாளர் பற்றிய தரவுகளை தொழிலாளர் அமைச்சகத்திடமிருந்து பெற மேலும் இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று கூடுதல் தலைமை வழக்குறைஞர் தெரிவித்துள்ளதை தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் தங்களது சொந்த மாநிலத்துக்கு அழைத்து செல்ல ரூ.146 கோடி செலவிட்டிருப்பதாக மாநில அரசு கூறுகிறது. இந்த தொகையை எவ்வாறு செலவிட்டுள்ளது என்பதை விரிவான விளக்கத்தை மாநில அரசு அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்குறைஞர் சூரியபிரகாசம் வாதிட்டுள்ளார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதி இந்த வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

செப்டம்பர் 14-ம் தேதி மக்களவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம்  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய தரவுகள் இல்லை என தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தரவு தளத்தை உருவாக்க இருப்பதாகவும் அமைச்சகம் மக்களவையில் கூறியிருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்