Aran Sei

‘மதரசாக்கள் பயங்கரவாதிகளின் பிறப்பிடம்’ – பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து

தரசாக்களும், இஸ்லாமியர்களின் கல்வி நிறுவனங்களும் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக உள்ளது என, மத்திய பிரதேச மாநில அமைச்சர் உஷா தாக்கூர் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மதரசாக்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சரான உஷா தாக்கூர், இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை வெளியிடுவத இது முதல்முறையல்ல.

“காஷ்மீரை பயங்கரவாதிகளின் தொழிற்சாலையாக மாற்றியுள்ள அனைத்து பயங்கரவாதிகளும் மதரசாக்களில் வளர்க்கப்பட்டவர்கள். தேசியத்தோடு இணங்க மறுக்கும் மதரசாக்களை, சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிபடுத்தும் வகையில் தற்போதைய கல்வி திட்டத்துடன் இணைக்க வேண்டும்” என்று உஷா தாக்கூர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. உஷா தாக்கூர் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஆட்டிவிக்கப்படும் பொம்மை என்று கூறியுள்ள காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் சிங் வர்மா, உரிய ஆதாரங்கள் இல்லாமல் இவ்வாறு பேசக்கூடாது என்று என்டிடிவி -யிடம் தெரிவித்துள்ளார்.

“நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். ஆனால், மதத்தின் பெயரால் சமூகத்தை பிரிக்கும் வகையில் விஷத்தை பரப்பாதீர்கள்” என்று சஜ்ஜன் சிங் வர்மா கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே “ஜெய் ஆதிவாசி யுவா சக்தி” என்ற பழங்குடியினர் அமைப்பை, தேச விரோத சக்தி என்று உஷா கூறியதையும், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே, மன்னிப்பு கோரியதையும் சஜ்ஜன் சிங் வர்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம், மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசியவாதி என்று உஷா தாக்கூர் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், நவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்குள் இஸ்லாமிய ஆண்களை அனுமதிக்க கூடாது என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்