Aran Sei

லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் – உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் அறிவிப்பு

லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லமிய இளைஞர், இந்து பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

உத்தரபிரதே மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மல்ஹானி தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் சனிக்கிழமையன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் தங்களுடைய உண்மையான பின்னணியை மறைத்து, ரகசியமாக, எங்கள் மகள்கள் மற்றும் தங்கைகளின் மானத்தோடு விளையாடியவர்களுக்க எச்சரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.

“அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும்” என்று யோகி ஆதித்யனாத் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“லவ் ஜிகாத்தை தடுப்பதற்கு அரசாங்கம் ஒரு முடிவை எடுப்பதாக” யோகி ஆதித்யனாத் கூறியுள்ளார்.

சமீபத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி புதிதாக திருமணமான தம்பதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை யோகி சுட்டிக்காட்டியுள்ளார்.

மணம் முடித்த அந்தப் பெண் இஸ்லாத்திலிருந்து திருமணம் செய்வதற்று சில மாதங்களுக்கு முன்னரே இந்து மதத்திற்கு மாறியதை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் “ 29.06.2020 அன்று மனுதாரர் மதம் மறியுள்ளார். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து 31.07.2020 அன்று திருமணம் நடந்துள்ளது. ஆகவே, திருமணத்திற்காகவே இந்த மத மாற்றம் நடந்துள்ளது” என்று நீதிபதி மகேஷ் சந்திரா திரிபாதி தெரிவித்துள்ளார்.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 2014ஆம் நடைபெற்ற, நூர் ஜஹான் பேகம் என்ற அஞ்சலி மிஷ்ரா வழக்கின் தீர்ப்பில் “திருமணத்திற்காக மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்