Aran Sei

`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

Image Credits: News Click

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர், திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக்க இருக்கும் உத்தரப்பிரதேச அரசின் மசோதாவை விமர்சித்துள்ளார். இது மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பின்னுக்குத் தள்ளும் செயல் என்று அவர் கூறியுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்துப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். திருமணத்தின் மூலம் மதம் மாறுவது குற்றம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் உத்தரப்பிரதேச அமைச்சரவை மதமாற்றத்தைத் தடடுப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியது. நவம்பர் 28 அன்று அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளார். இது நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே, பரேலி மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய இளைஞர் மீது காவல்துறை முதல் வழக்கைப் பதிவு செய்துள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29-ம் தேதி, ஒரு சொற்பொழிவை நிகழ்த்திய நீதிபதி மதன், ​​மதமாற்ற திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள், உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட நீதியை மீறுவதாக உள்ளது என்று கூறியுள்ளார். “மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, அசாம் ஆகிய மாநிலங்களும் இதே போன்ற மசோதாக்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் நோக்கம் லவ் ஜிகாத் என்று பிரபலமாக அறியப்படுவதை தடை செய்வதாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு சமூகமாக இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வயது வந்த ஒருவருக்குத் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உள்ளது என்று இதுவரை பல வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இப்போது, முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு என்ன நடக்கும் என்றும் நீதிபதி மதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2018-ம் ஆண்டு, இந்துக் குடும்பத்தில் பிறந்த, ஹதியா என்ற 24 வயதுப் பெண் சம்பந்தப்பட்ட வழக்கை அவர் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஒரு இஸ்லாமிய ஆணுடன் திருமணம் ஆனது. அந்தப் பெண் தனது சொந்த விருப்பத்துடன்தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். இருப்பினும், கேரள உயர் நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது.

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தத் திருமணம் செல்லுபடி ஆகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, சம்பந்தப்பட்ட இருவர் விருப்பத்துடன் உருவாக்கிக்கொள்ளும் உறவில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா என்ற கேள்வியையும் உச்ச நீதிமன்றம் எழுப்பியது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்