Aran Sei

பாஜக அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு – திடீரென மறுக்கும் மாணவி

Image Credits: The Print

முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்த் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டிய சட்ட மாணவி, காவல்துறைக்கு தான் தந்த வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். ஆகையால் இப்போது அவர் பொய் சாட்சி கூறல் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் என்று ‘லைவ் லாவில்’ செய்தி வெளியாகி உள்ளது.

லக்னோவில் உள்ள எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜரான சட்ட மாணவி, முன்னாள் மத்திய அமைச்சருக்கு எதிராகத் தான் எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்று அச்செய்தி குறிப்பிடுகிறது.

இதில் உடனடியாக, அரசு தரப்பு, சிஆர்பிசி பிரிவு 340-ன் கீழ், தவறான குற்றசாட்டு வைத்ததுக்காக அந்த மாணவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல்செய்துள்ளது.

நீதிபதி பி.கே.ராய் இந்த விண்ணப்பத்தைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் விண்ணப்பத்தின் நகலை வழங்குமாறு அரசு தரப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளார். விண்ணப்பத்தை விசாரிக்க அக்டோபர் 15-ம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாக ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பெண் படித்த ஷாஜகான்பூர் சட்டக் கல்லூரியை நடத்தி வரும் சின்மயானந்த் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரியில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, தனக்கு கீழ் பணிபுரியும் ஒரு பெண்ணை “பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது”, “உடலுறவுக்கு தூண்டுதல் அல்லது கவர்ந்திழுத்தல்” ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஐபிசியின் பிரிவு 376-சி இன் கீழ் சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சின்மயானந்த் (72) ஐபிசியின் 342 (தவறான சிறைவாசம்), 354-டி (பின்தொடர்தல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

இது தொடர்பாக, இந்தப் பெண், 2019 செப்டம்பர் 5 ஆம் தேதி, புது டெல்லியின் லோதி காலனி காவல் நிலையத்தில்,புகார் செய்துள்ளதாக அரசு வழக்கறிஞர் அபய் திரிபாதி தெரிவித்துள்ளார்.

அவரது தந்தை ஷாஜகான்பூரில் மற்றொரு புகார் அளித்தார், பின்னர் இரண்டு எஃப்ஐஆர்களும் இணைக்கப்பட்டன.

ஒரு சிறப்பு புலனாய்வு குழு அவரது புகாரைப் பதிவு செய்தது. பின்னர், சிஆர்பிசியின் பிரிவு 164-ன் கீழ், அப்பெண்  தெரிவித்ததை ஷாஜகான்பூர் காவல்துறை பதிவு செய்தது.

இரண்டு விசாரணையிலும், அவர் எஃப்ஐஆர் பதிவுகளை ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது விசாரணையில், தான் தெரிவித்ததை மாற்றி, புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதை மறுத்துள்ளார்.

அவர் முற்றிலும் முரணான கருத்துக்களை தெரிவித்ததால், சிஆர்பிசியின் பிரிவு 340 இன் கீழ் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளேன் என்று அபய் திரிபாதி கூறியுள்ளார்.

முன்னதாக, விசாரணை அதிகாரி 13 பக்க குற்றப்பத்திரிகையில் 33 சாட்சிகளையும் 29 ஆவண ஆதாரங்களையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

2020, பிப்ரவரி 3 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை ஷாஜகான்பூரிலிருந்து லக்னோவின் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்திற்கு மாற்றியது.

“புனிதர் சமூகத்தின் மூத்த தலைவர்” தன்னை துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டி ஒரு காணொளியைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஒரு நாள் கழித்து (ஆகஸ்ட் 24-ம் தேதி), அந்தப் பெண் காணாமல் போனபின்னர் இந்த வழக்கு முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.

சின்மயானந்த் அப்பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவரது தந்தை காவலர்களிடம் புகார் அளித்தார். இது முன்னாள் மத்திய அமைச்சரை அச்சுறுத்துவதற்கான “சதி” என்று கூறி அவரது வழக்கறிஞர் இதனை மறுத்தார்.

செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உத்தரபிரதேச அரசு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

சின்மயானந்திடம் இருந்து பணம் பறிக்க முயன்றதாகவும் சட்ட மாணவி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரிடமிருந்து ரூ.5 கோடி கோரியதாக சின்மாயானந்தின் புகாரின் பேரில் 23 வயது பெண் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவர்கள், மாணவர்களிடம் இருந்து குறுஞ்செய்தி பெறுவதை காட்டும் காணொளிகளை பரப்புவதாக மிரட்டினார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் குற்றம்சாட்டினார். குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற பாஜக செயல்படுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் அப்போது கடுமையாக விமர்சித்தன. மாணவிக்கு டிசம்பரில் பிணை வழங்கப்பட்டது.

தனக்கு எதிரான வழக்கு தொடர்பாக அந்தப் பெண் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்த அறிக்கையின் நகலைப் பெற சின்மாயந்தை அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது. அப்போது, பாலியல் சுரண்டலில் “மிகுந்த ரகசியத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியம்” என்று கூறியது.

குற்றம் சட்டப்பட்டவரின் செல்வாக்கு மற்றும் அரசியல் அதிகாரத்தைக் கணக்கில் எடுத்து, பல பெண் உரிமை ஆர்வலர்கள், உபி நிர்வாகம் சட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விஷயங்களை எளிதாக்கவில்லை என்று வாதிட்டனர்.

சமீபத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினர் கட்டாய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்காக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்