Aran Sei

“லவ் ஜிகாத்” திற்கு எதிராகச் சட்டம் இயற்ற முடியாது : உ.பி., சட்டக் குழு தலைவர்

credits : the indian express

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு “லவ் ஜிகாத்தை” தடை செய்யச் சட்டம் கொண்டு வருவது, இந்திய அரசியல் சட்டத்திற்கு முன் செல்லுபடி ஆகாது என உத்தரப்பிரதேசச் சட்டக் குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆதித்யாநாத் மிட்டல் கூறியுள்ளார்.

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரப்பிரதேசச் சட்டக் குழு (யூபிஎஸ்எல்சி) “மோசடி, தூண்டுதல், வற்புறுத்தல் மற்றும் திருமணத்தின் பெயரால் நடக்கும் மதமாற்றங்களை” தடுப்பதற்கான வரைவுச் சட்டங்களுடன் கூடிய அறிக்கையை மாநில அரசுக்குச் சமர்ப்பித்துள்ளது.

இது கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான சட்ட வரைவு என்றும் இதில் ”லவ் ஜிகாத்” எனும் வார்த்தையை அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. லவ் ஜிகாத் என்று குறிப்பிட்டால் அது இந்து – முஸ்லிம் என்ற இரு சமூகத்தை மட்டும் சுட்டிக்காட்டும் என்றும் ”ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்லது மதத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றினால், நிச்சயமாகச் சட்டத்தின் முன் செல்லுபடி ஆகாது” எனவும் மிட்டல் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் “லவ் ஜிகாத்”தைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை அடுத்து இதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியது யூபிஎஸ்எல்சி. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மிட்டல் “உள்துறை அமைச்சகம் அவரது வரைவை ஆராய்ந்து வருவதாகவும், அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுச் சட்டம் கொண்டு வர இயலும்” எனவும் கூறியுள்ளார்.

“மதச் சுதந்திரம்” எனும் பெயரில் யூபிஎஸ்எல்சி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் தற்போதைய விதிகள் மோசடி, கவர்ச்சி, தூண்டுதலின் பெயரால் நடக்கும் மத மாற்றங்களைத் தடுக்க இயலவில்லை எனக் கூறியுள்ளனர்.

யூபிஎஸ்எல்சி அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்த 268 பக்க சட்ட வரைவில், “திருமணம் எனும் ஒற்றை நோக்கத்திற்காகச் செய்யப்படும் மதமாற்றங்கள் செல்லாது என அறிவிக்கப்படும்”  என்று கூறியுள்ளது. மதமாற்றம் அழுத்தம், மோசடி, வற்புறுத்தல், செல்வாக்கு அல்லது திருமணக் காரணங்களால் நிகழ்ந்ததா என்பதை ஆராய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டால்,  குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “லவ் ஜிகாத்” தடைச் சட்டம் குறித்து பேசிய அலாகாபாத் உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ரவி கிரன் ஜெயின் ”இந்த மாதிரியான சட்டம் அரசியலமைப்புக்கே எதிரானது. ஒரு இந்து, முஸ்லிம் திருமணம் செய்வதுதான் லவ் ஜிகாத்தா? லவ் ஜிகாத்திற்கான விளக்கம் என்ன? இரு மதத்தைச் சார்ந்த நபர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது சட்டத்திற்கு விரோதமானது” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தை முன்மாதிரியாக வைத்து ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா என பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் “லவ் ஜிகாத்” – திற்கு எதிரான சட்டம் இயற்றும் முனைப்பில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்