Aran Sei

பாரத் பந்த் – நிலமற்ற விவசாயிகளின் கோரிக்கை என்னவாயிற்று?

ந்திய மக்கள் தொகையில் மிகப் பெரிய பிரிவினர் யார் தெரியுமா? நிறைய பேர் உடனே நிலமுள்ள விவசாயிகள் என்று கூறிவிடுவார்கள். இல்லை. அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, கிராமப்புறங்களில் வாழும் நிலமற்ற விவசாயிகள்தான் மிகப்பெரும் பிரிவினர் எனக் கூறுகிறது.

தற்போது நம்மிடம் உள்ள அண்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அது 26.3 கோடி பேர் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது. இதில் 11.9 கோடி பேர் மட்டுமே நிலமுள்ள விவசாயிகள். 14.4 கோடி பேர் நிலமற்ற வேலையாட்கள் அல்லது விவசாயக் கூலிகள். அதாவது நிலமுள்ள விவசாயிகளை விட நிலமற்ற, கூலி விவசாயிகள்தான் அதிகம். எனினும் இவர்கள் கொள்கைகளிலோ, கொள்கை விவாதங்களிலோ இடம் பெறுவதே இல்லை.

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் சமீப காலங்களில் இந்த மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய 2001 ம் ஆண்டு கணக்கெடுப்பில் 10.7 கோடி பேர்தான் நிலமற்ற விவசாயிகளாக இருந்தனர். பத்தாண்டுகளில் 3.7 கோடி பேர் கூடியுள்ளனர். இது மிகப் பெரிய அதிகரிப்பு. இதில் குறைவான பகுதியினரே குடும்பப் பிரிவினையாலும், மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் நிலமற்றவர்களாக ஆகி இருக்கலாம். மிக அதிக அளவிலான சிறு விவசாயிகள் (மிகக்குறைந்த அளவு கைவினைஞர்கள்) இந்த நிலமற்ற விவசாயிகள் நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சிறு விவசாயிகளும் கைவினைஞர்களும் வாழ வழியின்றி நிலமற்ற கூலி விவசாயிகளாக மாறுவது இன்றும் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

அதே சமயம் இந்த நிலமற்றவர்களுக்குத் தங்களைச் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு காரணங்களால் போதிய வேலை கிடைப்பதும்  இல்லை. விவசாயத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதும், களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவதும் இதற்கு  ஒரு காரணம். இரண்டாவதாக நிலமற்ற தலித் மக்களை உள்ளூர் உயர்சாதியினர் ஒதுக்கி வைப்பதும் அவர்கள் தங்கள் கிராமத்தில் வேலை செய்து பிழைப்பு நடத்துவதைத் தடுத்து விடுகிறது.

எனவே, நிலமற்ற கூலி விவசாயிகள் என அடிக்கடி கூறப்படுவோர், அவரவர் கிராமங்களில் வேலை செய்பவர்கள் (வேலை இருக்கும் போது மட்டும்) மட்டுமே. ஆனால் கூடுதலாக அவர்கள் அருகிலிருக்கும் சுரங்கங்களிலோ, குவாரிகளிலோ, கட்டட வேலைகளிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள். எப்போதும் அதிகாலையில் புறப்பட்டு இரவு நேரங்களில் வீடு திரும்புவார்கள். பலரும் தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக, தொலைவில் உள்ள நிலங்களில் , சுரங்கங்களில், செங்கற் சூளைகளில், கட்டுமானப் பணிகளில், மிக நீண்ட நாட்களுக்கு வேலை செய்பவர்களாகவும் சொந்த ஊருக்குக் குறைந்த காலத்திற்கு வந்து செல்பவர்களாகவும், வேலை செய்து ஓரளவு அதிக வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர்.

அரசுகள் இவர்களின் மீது கவனம் செலுத்தாததால், அவர்களாகவே பிழைக்கும் வழியைக் தேடிக் கொண்டு அண்மைப் பத்தாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதை எல்லாம் கோவிட் 19 தொற்று சுக்குநூறாக்கிவிட்டது.

மிக வேகமாக நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (நூறுநாள் வேலைத் திட்டம்) மட்டுமே தேசிய அளவில் கடந்த இருபது ஆண்டுகளில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க  ஒரே திட்டம். முந்தைய தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு இதற்கான சட்டத்தை இயற்றி இதற்கு முக்கியத்துவம் தருவது போல் தோன்றினாலும், இந்தத் திட்டத்திற்கான போதுமான நிதியை ஒதுக்கவில்லை.

பின்னர் ஆட்சிக்கு வந்த  மோடி அரசு தொடக்கத்தில் இதனைமிக அதிகமாக விமர்சனம் செய்தது. எனினும் நல்ல எண்ணம் தோன்றி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. என்றாலும் போதிய நிதியை ஒதுக்கவில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடு கோவிட்19 சிறப்பு தொகுப்பாகக் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்த போதிலும், ஊர்களுக்குத் திரும்பிவந்த தொழிலாளர்களால் தேவைகள் அதிகரிக்கவே, இந்த ஒதுக்கீடு அதிக பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதனால் கிராமப்புற இடர்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக நிலமற்ற கூலி விவசாயிகளின்  நிலை மிகவும் மோசமானது.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றும் போது, இறுதிக்கட்டத்தில் ‘உத்தரவாதம்’ என்பது நீர்த்து போனது. முன்னதாக இந்த உத்தரவாதம் என்பது சட்டத்தில் உள்ள நடைமுறைப்படி அரசால் வேலை தர முடியவில்லை என்றால், வேலை கேட்பவர்களுக்கு ஈட்டுத் தொகை தரப்பட வேண்டும் என இருந்தது. தற்போதைய திருத்தத்தால் ‘அரசின் நிதி நிலைமை அனுமதித்தால்’ என்பது இடையில் செருகப்பட்டு ‘உத்தரவாதம்’ என்பதை நீர்த்துப் போகச் செய்து விட்டது. இதனால் சட்டப்படியான உத்தரவாதம் என்பது வலுவிழந்தது. இதனை சாக்காகக் கொண்டு கட்டாயமாகத் தர வேண்டிய ஈட்டுத் தொகை 95 விழுக்காடு தரப்படவே இல்லை.

இந்தத் திட்டம் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு மற்றும் செலவினமாக மட்டுமே அரசு ஆவணங்கள் மூலம் கண்காணிக்கப்படுவதால், அதன் வழக்கமான ஊழல் மிகுந்த செயல்பாடு இந்தத் திட்டத்தின் பயனை மிக வறிய நிலையிலிருக்கும் நிலமற்ற விவசாயிகள் பெறுவதை மேலும் குறைத்துவிட்டது. இதன் நீட்சியாக ஏராளமானோர் இதன் மீதான நம்பிக்கையையே இழந்துவிட்டனர். அதே சமயம்,  ஒழுங்காக நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு சில இடங்களில் ஓரளவு நம்பிக்கையைப் பெற்றுள்ளது‌. எனவே, இந்தத் திட்டம் நல்ல முறையில் நிறைவேற்றப்பட வேண்டும். இதனை வலுவாக்கவும், விரிவாக்கவும், பரந்த அளவில் பரப்புரை நடத்தப்பட வேண்டும். அது அதிகாரிகள் காட்டும் கணினி திரையிலிருந்தோ, அதிகார வர்க்கத்தின் திறன்பேசிகளிலிருந்தோ இல்லாமல், களத்திலிருந்து எடுக்கப்பட்ட உண்மையான தரவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

எனினும் அந்த மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, நிலமற்ற ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க இந்த ஒரு திட்டம் மட்டுமே போதுமானது அல்ல என்பது தெளிவு. ஆகவே மேலும் இரண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, அனைத்துக் கிராமப்புறங்களிலும் குறைந்த பட்ச நிலவுடைமை என்ற சிந்தனை. நிலம் சிறிதாக இருந்தாலும், நீர், ஈரப்பத பாதுகாப்பு, சிறு விவசாயம், குறைந்த செலவில் தீவிர சாகுபடி, வேளாண்- சூழல் அணுகுமுறை ஆகியவை உணவுப் பாதுகாப்பு, உடல்நலம், கிராமத்துடன் உறுதியான பிடிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பளிக்கும்.

இப்போது, அடிக்கடி ஏழைகளுக்கு அளிக்க நிலங்கள் உள்ளன எனக் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆமாம். உண்மைதான் ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. ஆனால் அது ஏழைகளுக்கு அல்ல. ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் கார்ப்பரேட்டுகளுக்குத் தருவதற்காக எப்போதும் தயாராகத்தான் உள்ளன. ஏராளமான கிராமப்புற நிலங்கள் நகர முதலாளிகளிடமும், வட்டிக்காரர்களிடமும் போய்க் கொண்டிருக்கின்றன. தற்போதைய அதிகார சமநிலையைப் பார்க்கும் போது கிராமப்புற நிலங்கள் மிக அதிகமாக உள்ள, மிக அவசியமாக நிலம் தேவைப்படும் இந்த ஏழை நிலமற்ற விவசாயத் கூலிகளுக்குத் தவிர பிற அனைத்து வகைகளுக்கும் எடுத்துக்கொள்ள தயாராக உள்ளன.

நிலம் பற்றாக்குறை என்ற பேச்சு, இந்தப் பஞ்சை பராரிகளுக்கு நிலம் தர வேண்டும் என்கிற போது மட்டும் ஓங்கி ஒலிக்கிறது. இதை ஏற்கக் கூடாது. இந்தப் பொய்களும் புரட்டுக்களும் தோலுரிக்கப்பட வேண்டும். நாடு, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம், கிராமங்களில் வாழும் அனைவருக்கும் குறைந்த பட்ச நிலம் என்ற திசையில் பயணிக்க வேண்டும்.

இறுதியாக, நிலங்களிலிருந்து அந்நியப்படுத்துதல் என்ற நடைமுறை தடுக்கப்பட்டுச் சிறு விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும். 2001-2011 ஆண்டுகளில் மட்டும் ஒரு நாளைக்கு 2,300 பேர் வீதம் 86 லட்சம் பேர் நிலத்தை இழந்திருக்கிறார்கள். நிலம் உடைய விவசாயிகளின் எண்ணிக்கை 12.7 கோடியிலிருந்து 11.8 கோடியாகக் குறைந்துள்ளது. இவை பெரும்பாலும் ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்குக் கைமாறி உள்ளன.

நான் சிறிது காலத்திற்கு முன், விதர்பாவில் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது, கிராமத்தின் பல பகுதிகளிலும் உள்ள நிலங்களை விற்பனை செய்ய இடைத்தரகர்கள் கூட்டம் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டது. நகரங்களில் இருந்து பணக்காரர்கள் வந்து தொடர்ந்துகொண்டே உள்ளார்கள். எனவே நானும் அவர்களைப் போல் ஒருவன் என்று அவர்கள் நினைத்து விட்டார்கள்.

எனவே சிறு விவசாயிகள் நிலத்திலிருந்து அந்நியப்படுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மிகக் குறைந்த செலவில் வேளாண்- சுற்றுச் சூழல் அணுகுமுறை இதற்கு உதவும். பெரும் அளவிலான நீர்ப் பாதுகாப்பு, சிறு பாசனம் ஆகியவற்றிற்கு அரசின் கரம் நீள வேண்டும். இவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை அரசு உரியவிலை கொடுத்து கொள்முதல் செய்து இந்தக் கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.

இந்த இரண்டு வகையான அணுகுமுறை நிலமற்ற விவசாயிகளை சிறு நில விவசாயிகளாகவும், சிறு விவசாயிகளை நில அந்தியப்படுத்தலிலிருந்து பாதுகாக்கவும் உதவும். இதன் மூலம்  கிராமப்புற வறுமை நிலை பெரிய அளவில் ஒழிக்கப்பட்டு இந்தியாவின் வேளாண் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்.

(www.thewire.in இணையதளத்தில் பாரத் தோக்ரா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்