Aran Sei

சமூக பாதுகாப்பு நெறிமுறைகள் – ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க 45 நாட்கள் கெடு – மத்திய அரசு

Image Credits: The Wire

சமூக பாதுகாப்பு நெறிமுறை 2020-ன் கீழ் வரைவு விதிகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சம் அறிவித்துள்ளது.

இந்தச் சமூக பாதுகாப்பு விதிமுறையின் கீழ் பயன்களை பெற, முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நடைபாதை தொழிலாளர்கள் போன்றோர் அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அமைச்சகம் இந்த விதிகளை நவம்பர் 13-ம் தேதி அறிவித்துள்ளது. விதிகளைப் பற்றிய ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளைச் சம்பந்தப்பட்வர்கள், அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 2020-ம் ஆண்டு சமூக பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு நிதி (இஎஸ்ஐசி), பணிக்கொடை, பேறுகால சலுகை, சமூக பாதுகாப்பு , கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களுக்கான மேல்வரி, முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்ரகள், நடைபாதை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிகளை இந்த வரைவு விதிகள் வழங்குகின்றன.

“முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், நடைபாதை தொழிலாளர்கள் மத்திய அரசு இணையதளத்தில் தானாகப் பதிவு செய்வது உட்பட ஆதார் அடிப்படையிலான பதிவை இந்த வரைவு விதிகள் வழங்குகின்றன. இது போன்ற இணையதளத்தை உருவாக்கும் நடவடிக்கையைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்கனவே தொடங்கியுள்ளது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் மத்திய அரசு, மாநில அரசு அல்லது மாநில நல வாரிய இணையத்தளத்தில் இதைப் பதிவு செய்து கொள்ளலாம்.

“இதன் மூலம் கட்டமான தொழிலாளர், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குப் புலம் பெயர்ந்தாலும், அங்கும், அவருக்குரிய பலன்களைப் பெற முடியும். அந்தத் தொழிலாளிக்கான பலன்களை வழங்குவது, மாநில கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் பொறுப்பு” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிறுவனம் மூடப்பட்டால் பதிவை ரத்து செய்வது உட்பட நிறுவனத்தின் ஒற்றை வழி மின்னணு பதிவுக்கும் விதிகள் வழங்குகின்றன.

கட்டுமான தொழிலாளிகளுக்கான செஸ் வரியை (cess) நிறுவனத்தின் உரிமையாளர் கணக்கிடுவார். இது மாநில பொதுப்பணித் துறை அல்லது மத்திய பொதுப்பணித் துறை அல்லது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் குறிப்பிட்டுள்ள கட்டுமான செலவின் அடிப்படையில் கணிக்கப்படும்.

“செஸ்-ஐ தாமதமாகச் செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு மாதமும் 2% ஆக அல்லது ஒரு மாதத்தின் ஒரு பகுதிக்கு 1% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின் கீழ், கட்டுமான தளத்திலிருந்து எந்தவொரு பொருளையும் இயந்திரத்தையும் அகற்றவோ அசைக்கவோ கூடாது என உத்தரவிடும் அதிகாரம் மதிப்பிடும் அதிகாரிக்கு உள்ளது. கட்டுமானப் பணிகளை காலவரையின்றி நிறுத்துவதற்கான அத்தகைய அதிகாரம் வரைவு விதிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், வரைவு விதிகளின் கீழ், மதிப்பீட்டு அதிகாரி, கட்டுமானத் தளத்தைப் பார்வையிட, கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர் வாரியத்தின் செயலாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும்” எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்