மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8-ம் தேதி இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடத்துவதற்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா எனும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அதன் பின் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவர அரசு முன்வந்துள்ளதாக அறிவிப்பு வந்தது இருந்தும் விவசாயிகள் சட்டங்களை முழுமையாகத் திரும்பிப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஹெச்.எஸ். லாகோவால் டெல்லி – ஹரியாணாவை இணைக்கும் சிங்லு பகுதி எல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஏற்கெனவே எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அவற்றை ஏற்காதவரை எங்களுடைய போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
“வரும் நாட்களில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடையும் என்றும், டிசம்பர் 5-ம் தேதி, இந்தியா முழுவதும் பெரும் தொழிலதிபர்களின் உருவ பொம்மைகளும் பிரதமர் மோடியின் உருவ பொம்மையும் எரிக்கப்படும்” என்று இந்தக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
”டிசம்பர் 7-ம் தேதி பஞ்சாப் மாநில விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் இனைந்து மத்திய அரசு அவர்களுக்குக் வழங்கிய விருதுகளை திருப்பிக் கொடுக்கவுள்ளனர் என்றும் டிசம்பர் 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“டிசம்பர் 5-ம் தேதி, மத்திய அரசுடன் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில், ‘வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்பது மட்டுமே எங்களது ஒரே கோரிக்கையாக இருக்கும்” என்று விவசாய கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.
இது வரலாற்றிலேயே விவசாயிகளுக்கு மிகப் பெரிய வெற்றியாகவும் அரசுக்கு மிகப் பெரிய தோல்வியாகவும் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதாகவும் நீண்ட பேச்சுவார்த்தைகளில் பிரயோஜனம் இல்லை என்றும் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது தான் ஒரே கோரிக்கை என்றும் விவயசாய சங்கங்கள் கூறியுள்ளன.
குருகிராமில் செய்தியாளர்களுடன் பேசிய ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானா அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகக் கூறியுள்ளார். “காங்கிரஸ், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்” என்றும் தெரிவித்த அவர், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதற்கிடையே, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்குத் திமுக, இடது சாரி கட்சிகள் உள்பட 8 எதிர்கட்சிகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.