Aran Sei

ஹைதராபாத் கொடுமை: “எதிர்த்ததால் எரித்துவிட்டான்” – உடலுடன் கல்லறையில் போராட்டம்

Image Credits: The Hindu

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்தபோதே இறந்த 13 வயது பட்டியல் சாதி சிறுமியின் இறுதிச் சடங்குகள் நேற்று பிற்பகல் அவரது சொந்த கிராமமான பலேகுடெமில் நடைபெற்றன.

ஏறக்குறைய நான்கு வாரங்களுக்கு முன்னர், 25 வயதான திருமணமான ஒரு நபர் அவரது வீட்டில் இச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அதனை எதிர்த்த இச்சிறுமியை அவர் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முஸ்தபாநகரைச் சேர்ந்த குற்றம்சாட்டப்பட்ட அல்லாம் மரையாவின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டு உதவியாளராகப் பணிபுரிந்துவந்துள்ளார். செப்டம்பர் 18-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சி தோல்வி அடைந்ததால் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாகப் பள்ளிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு, சிறுமியின் ஏழைப் பெற்றோர் அவர்களது இரண்டாவது மகளை (இச்சிறுமி), கம்மத்திற்கு வீட்டு உதவியாளராக வேலை செய்ய அனுப்பியதாகப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன என்று ‘தி இந்து‘ செய்தி குறிப்பிடுகிறது.

குற்றம் நடந்த 15 நாட்களுக்குப் பிறகு இந்தக் கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இக்கொடுமைக்கு உள்ளாக்கியவன்  அதே சமூகத்தைச் சேர்ந்தவர். பாதிக்கப்பட்ட பெண்ணை உள்ளூர் தனியார் மருத்துவமனையில் இரகசியமாக அனுமதித்துவிட்டு அச்சுறுத்தியுள்ளார்.

ஏறக்குறைய பதினைந்து நாட்களாக, அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில்  அவதிப்பட்டுள்ளார். அதன் நிர்வாகம் வழக்கமான வார்டில் காயமடைந்த சிறுமிக்குச் சிகிச்சை அளித்துள்ளது.

இந்தச் சம்பவம் அக்டோபர் 5 – ம் தேதி தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. படுக்கையில் இருந்தபடி சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி விவரிக்கும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலான பிறகுதான் இது வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, அதிகாரிகள் அதே நாளில் சிறுமியை ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு மாற்றினர். சில நாட்களுக்குப் பிறகு சிறந்த சிகிச்சைக்காக அவரை மாநிலத் தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர்.

மருத்துவ – சட்ட வழக்கு குறித்து காவலர்களுக்குத் தெரிவிக்கத் தவறியதற்காக மாவட்ட சுகாதார அதிகாரிகள் கம்மத்தில் உள்ள ஸ்ரீ பூஜா மருத்துவமனைக்கு அக்டோபர் 8-ம் தேதி சீல் வைத்தனர்.

கம்மம் 1 நகரக் காவல்துறையினர் அல்லாம் மராயா மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 மற்றும் ஐபிசியின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அக்டோபர் 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அவர் இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

பலியானவரின் உடல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே ஹைதராபாத்தில் இருந்து பலேகுடெமுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. மகளிர் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலுடன் கல்லறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடூரமான வழக்கில் விரைவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்