Aran Sei

பத்திரிகையாளர் மீது தேச விரோத வழக்கு – உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை

Credit : thewire.in

த்ராஸ் செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் உட்பட 4 பேர் மீது உத்தரப்பிரதேசக் காவல்துறை தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமையன்று ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரை மதுரா சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் நிறுத்திச் சோதனை செய்ததாகவும் அதில் பயணித்த நால்வர் மீதும் சந்தேகம் ஏற்பட்டதன் அடிப்படையில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சித்திக் காப்பன் என்பவர் பத்திரிகையாளர் என்றும், டெல்லியில் செயல்படும் ஒரு மலையாளச் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்றும் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றதாகவும் ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

காப்பன் கைதை தொடர்ந்து, `கேரளா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்’ உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குக் கடிதம் எழுதியது. காப்பன் தன்னுடைய பணியைச் செய்வதற்காகவே ஹத்ராஸ் சென்றார். ஆகவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பாகக் கடிதம் எழுதப்பட்டதாக தி இந்து கூறுகிறது.

இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் உட்பட 4 பேர் மீதும் தேச விரோதச் சட்டம் (IPC 124A), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின் படி, கைது செய்யப்பட்டவர்கள் மிகப்பெரி சதித் திட்டத்துடன் “ஹத்ராஸ் நிகழ்வில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும்” என்று அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளை எடுத்துக்கொண்டு, அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன் ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக, துணைக் கண்காணிப்பாளர் பிரபால் சிங் என்பவர் நால்வர் மீதும் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக “பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் மற்றும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் அதிகுர் ரஹ்மான், மசூத் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது” என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் அனீஸ் அஹ்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் குடும்பத்தினரைச் சந்திக்க இந்தக் குழுவினர் ஹத்ராஸுக்குச் சென்றுகொண்டிருந்தனர். யோகி அரசாங்கத்தின் கீழ் உ.பி-யில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சந்திக்க நினைப்பது கூட இப்போது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது என்பதை இந்தச் சட்டவிரோதக் கைது காட்டுகிறது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உ.பி-யில் தோல்வியுற்ற சட்டம்-ஒழுங்கு நிலைமையை மூடி மறைக்க பாஜக அரசு நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்புப்படுத்த முயல்கிறது. சதி கோட்பாட்டை உருவாக்குவதன் மூலம் உ.பி காவல்துறை பிரச்சினையின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கேம்பஸ் ஃப்ரண்ட் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் ஆகியோரை  உடனடியாக விடுவிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்”என்றும் அனீஸ் அஹ்மது அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்