Aran Sei

தங்கக் கடத்தல் வழக்கு – பினராயி விஜயனை தொடர்புபடுத்த மிரட்டப்படும் ஸ்வப்னா

credits : indian express

கேரளத்தில்  தங்கக் கடத்தல் வழக்கில் அம்மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் தொடர்புள்ளதாகக் கூறச் சொல்லி ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத் துறை கட்டாயப்படுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்குத் தங்கம் கடத்தப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தற்போது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அட்டகுலங்காரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள நபர்களுடன் செய்த நிதி பரிவர்த்தனைகளில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சம்பந்தப்படுத்தி வாக்குமூலத்தைத் தருமாறு அமலாக்கத் துறை ஸ்வப்னாவை வற்புறுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று (18/11/20) ஸ்வப்னா சுரேஷை விசாரித்த அமலாக்கத் துறையினர், ஸ்வபனா சுரேஷ் அப்ரூவராக ( அரசு தரப்பு சாட்சியம்) மாறி, முதலமைச்சருக்குத் தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக ஒப்புதல் அளித்தால் விடுதலை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஸ்வப்னாவை வற்புறுத்துவது மட்டுமல்லாமல்அமலாக்கத் துறை தயாரித்த போலியான வாக்குமூலத்தில் கையெழுத்திடவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளது அந்த ஆடியோவின் மூலம் தெரிவயவந்துள்ளது.

பினராயி விஜயன் அரசாங்கத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும், அவர் ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கவும் அமலக்கத்துறை முயல்வதாக இடது ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பினராயி விஜயனை இந்த வழக்கில் சிக்கவைக்க முயற்சி செய்த அமலாக்கத்துறைக்கு உடன்படாததால்தான் தன் மீதுபணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை கைது செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கரன், தற்போது கொச்சியில் உள்ள காக்கநாடு துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பினராயி விஜயனைக் குறிவைத்து ஒரு பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக  மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்திய அமைப்புகள் இந்த வழக்கில் குற்றவாளிகளின் மூலம் விஜயனுக்கு தொடர்பு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வதாகக் அவர்கள் கூறியுள்ளனர். பாஜகவும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இணைந்து கேரள கம்யுனிஸ்ட் கட்சியின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க இணைந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், ”கசிந்துள்ள ஆடியோ” அரசாங்கத்தின் கீழ்தரமான செயலை மறைப்பதற்கு, பினராயி அரசால் திட்டமிட்டு பரப்பபட்டது என கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர் போன்ற தோற்றத்தை உருவாக்கி, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனுதாப ஓட்டுக்களை பெறுவதே திட்டம் என அவர் கூறியுள்ளார்.

கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், விஜயன் ஊடக ஆலோசகர்கள் மூலம் அரசாங்கத்தைச் சூழ்ந்திருக்கும் பல முறைகேடுகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்