2018 -ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, புனேவுக்கு அருகில் உள்ள பீமா கோரேகானில் ஒரு கும்பலை வன்முறைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி, பழங்குடி உரிமைகளின் போராளியும், பாதிரியாருமான தந்தை ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பது “துரதிர்ஷ்டவசமானது” என்று நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
காடுகளுக்குள் நிலம் மற்றும் உரிமைகளுக்காகப் போராடிவரும் பழங்குடியினருக்கு ஆதரவளித்து வரும் ஸ்டான் சுவாமியைக் கைது செய்வது, மாற்றுக் கருத்துகளை முடக்கும் செயல் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
“பழங்குடி உரிமை ஆர்வலரும் பாதிரியாருமான தந்தை ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர் பல தசாப்தங்களாகப் பழங்குடியினரிடையே பணியாற்றி வருகிறார். பழங்குடியினரின் ஜனநாயக உரிமைகளைச் சிதைப்பதுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களைக் கைது செய்வது இந்திய அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது,” என்று கேரள முதல்வர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ആദിവാസികൾക്കിടയിലെ മനുഷ്യാവകാശ പ്രവർത്തകനും ജസ്യൂട്ട്…
Posted by Pinarayi Vijayan on Monday, October 12, 2020
தான் ஒருபோதும் பீமா கோரேகானுக்குச் செல்லவில்லை என்று கூறிய 83 வயதான சுவாமி, வியாழக்கிழமை மாலை ராஞ்சியில் உள்ள தனது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வெள்ளியன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அக்டோபர் 23 வரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தலையீட்டைக் கோரியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார். சுவாமியின் உடல்நலம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய விஜயன் “இந்தக் கைது கருத்து வேறுபாடுகளின் குரல்களை நசுக்கும் ஒரு நடவடிக்கை எனும் குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பீமா கோரேகானில் வன்முறைக்கு ஒரு கும்பலைத் தூண்டுவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள் கவுதம் நவலகா மற்றும் சுவாமி உள்ளிட்ட 8 பேர் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
புனே அருகே, 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடந்த, பீமா கொரேகான் போரின் 200-வது ஆண்டு விழாவில் ஏற்பட்ட வன்முறையில், ஒருவர் பலியாகி பலர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று எல்கர் பரிஷத் குழுவின் உறுப்பினர்களின் ஆக்கிரோஷமான உரைகளைத் தொடர்ந்து இந்த வன்முறை நிகழ்ந்ததாகப் புனே காவல்துறை குற்றம் சாட்டியது என்று ‘பாரஸ்ட் போஸ்ட்’ செய்தி குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.