Aran Sei

“விவசாயிகளுடன் விவாதிக்கத் தயாரா? ” – ஒன்றிய அமைச்சர்களுக்கு டெல்லி முதல்வர் சவால்

அரவிந்த் கேஜ்ரிவால் - Image Credit : India Today

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இரண்டாவது முறையாக டெல்லியின் சிங்கு எல்லைக்குச் சென்று, ஒன்றிய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், இதற்கு முன் டிசம்பர் 7-ம் தேதி சிங்கு எல்லைக்குச் சென்றிருந்தார். இப்போது நேற்று சென்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

புதிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்யுமாறும், விவசாயிகள் தமது வாழ்வை தக்க வைத்துக் கொள்ள போராடுகின்றனர் என்றும் அவர் பேசியுள்ளார்.

“எந்த ஒரு ஒன்றிய அமைச்சரும் விவசாயிகளுடன் வெளிப்படையான விவாதத்தில் ஈடுபடும்படி நான் சவால் விடுக்கிறேன். அப்போது, இந்தச் சட்டங்கள் எவ்வளவு தீங்கு விளைவிப்பவை என்று தெளிவாகி விடும்” என்று அவர் பேசினார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

“40-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தமது உயிரை இழந்துள்ளார்கள். இவர்கள் நமது மக்கள், நமது சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், பெரியவர்கள். இவர்கள் நம் நாட்டின் மக்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், அவர்களது போராட்டத்தை முடித்து வையுங்கள். இன்னும் எத்தனை உயிர்களை நீங்கள் எடுப்பீர்கள்” என்று ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய அவர் இந்த விவசாயச் சட்டங்களை ரத்து செய்யுமாறு கைகூப்பி கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சென்று விட்டால் விவசாயிகளுக்கு எதுவும் மிஞ்சாது” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“APMC மண்டிகள் இல்லாதல பீகாரில் ஒரு விளைபொருள் குவின்டாலுக்கு ரூ 800 விலைக்கு விற்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ 1,850-க்கு அதிகமாக நமது பீகார், உத்தர பிரதேச விவசாயிகள் எங்கு விற்க முடிகிறது? மண்டிகளுக்கு வெளியே அவர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையில் 50% கூடக் கிடைப்பதில்லை.”

“இந்தச் சட்டங்கள் பெரிய நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஆதாயத்துக்கானது, விவசாயிகளின் நலனுக்கானது இல்லை” என்று அவர் பேசியுள்ளார்.

“நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் கவனமாக கவனித்து வருகிறோம். உங்களது வலி குறைந்தபட்சமாக இருப்பதை உறுதி செய்கிறோம்” என்று துணை முதல்வர் மனீஷ் சிசோதியா பேசியதாக இந்தியா டுடேசெய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்