Aran Sei

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை தேசியக்கொடியை ஏந்த மாட்டேன் – மெஹ்பூபா முஃப்தி

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அதிகாரம் வழங்கும்வரை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றும் இந்திய தேசியக்கொடியை ஏந்தமாட்டேன் என்றும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

மெஹ்பூபாவின் இந்தக் கருத்திற்குப் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜகவின் ஜம்மு காஷ்மீர் பிரிவு, மெஹ்பூபா முஃப்தியை தேசவிரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் அரசியல் சாசனப் பிரிவு 370ஐ மத்திய அரசு திரும்பப் பெற்றது. அத்துடன், காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மெஹ்பூபா உட்பட காஷ்மீரைச் சேர்ந்த பல அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். அவ்வாறு கடந்த 14 மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்த மெஹ்பூபா, சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பிறகு மெஹ்பூபா முஃப்தி, வெள்ளிக்கிழமை முதல்முறையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

மெஹ்பூபா அமர்திருந்த மேசையின் முன் காஷ்மீரின் கொடியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொடியும் அனைவருக்கும் தெரியும்படி வைக்கப்பட்டிருந்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

“அரசியல் சாசனப் பிரிவு 370 திரும்பப்பெறப்பட்டால், இந்திய தேசியக்கொடியைப் பிடிக்க யாரும் இருக்க மாட்டார்கள்” என்று மெஹ்பூபா கூறிய கருத்து தொடர்பாகச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மேசையிலிருந்த காஷ்மீரின் கொடியைச் சுட்டிக்காட்டிய மெஹ்பூபா “இதுதான் என் கொடி” என்று கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

“எங்களுடை கொடி எங்களுக்கு மீண்டும் கிடைத்தால், நாங்கள் அந்தக் கொடியையும் (இந்திய தேசியக் கொடி) ஏற்றுவோம். எங்களிடமிருந்து திருடப்பட்ட எங்கள் கொடி எங்கள் கையில் திரும்பக் கிடைக்கும்வரை, வேறு எந்தக் கொடியையும் ஏந்தமாட்டோம்” என்று மெஹ்பூபா தெரிவித்துள்ளார்.

“இந்திய தேசியக்கொடியுடனான எங்களின் தொடர்பு, எங்கள் மாநிலக் கொடியின் மூலமாகவே கட்டமைக்கப்பட்டதே தவிர, அதைத் தவிர்த்துவிட்டு இது தனியாக இருக்க முடியாது” என்று மெஹ்பூபா கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மூவண்ணக் கொடி அரசியல் சாசனத்தின் ஒரு பகுதி என்றும், ஆனால் பாஜக, அரசியல்சாசனத்தையும் கொடியையும் இழிவு படுத்திவிட்டதாக மெஹ்பூபா குற்றம்சாட்டியுள்ளார்.

“ஜம்முவின், கத்துவா பகுதியில் ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெற்றபோது, இந்த தேசியக் கொடியுடன் வந்த பாஜகவினர், குற்றவாளிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள்” என்று கூறியுள்ள மெஹ்பூபா காஷ்மீர் மக்களின் கண்ணியத்தை பாஜகவினர் பறித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

“நாங்கள் சுதந்திர, ஜனநாயக மற்றும் மதர்ச்சார்பற்ற இந்தியாவுடன்தான் இணைந்தோம். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லாத, எங்களுடைய கண்ணியத்தைப் பறித்த தற்போதைய இந்தியாவுடன் எங்களால் பொருந்திப்போக முடியாது என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்” என்று மெஹ்பூபா ஆவேசமாகக் கூறியுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை தேர்தலில் எனக்கு விருப்பம் இல்லை. எந்த அரசியல்சாசனத்தின் கீழ் நான் தேர்தலில் போட்டியிட்டேனோ. அது திரும்பும்வரை எனக்கு தேர்தல் தேவையில்லை” என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த சக்தியாலும் காஷ்மீர் கொடியை மீண்டும் ஏற்றுவதற்கோ அல்லது அரசியல் சாசனப் பிரிவு 370 மீண்டும் வழங்குவதற்கோ முடியாது என்று காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்ணா தெரிவித்துள்ளார்.

“மெஹ்பூபா முக்தியின் தேச விரோதப் பேச்சைக் கருத்தில்கொண்டு, அவரை தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் ஆகவே காஷ்மீரில் ஒரே ஒரு கொடி மட்டுமே இருக்க முடியும் என்றும் கூறியுள்ள ரவீந்தர் காஷ்மீர் தலைவர்கள் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கருதினால், பாகிஸ்தானுக்கோ, சீனாவுக்கோ போகலாம் என்றும் கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

“இதுபோன்ற கருத்துகள் எந்த ஒரு சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்