ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய நிலச்சட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“புதிய நிலச்சட்டங்கள், பாஜக மக்களுக்கு வழங்கியுள்ள அடுத்த பரிசு. காங்கிரஸ் கட்சி இந்த சட்டங்களை நிராகரிக்கிறது. மக்களின் உரிமையை பாதுகாப்போம் என்று உறுதிபூண்டுள்ளோம்” என்று ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் குலாம் அஹ்மத் மிர் கூறியுள்ளார்.
நாட்டின் பிற பகுதியில் இருப்பவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை வழங்கும் வகையில், மத்திய அரசு சில சட்டங்களில் நேற்று திருத்தங்களை கொண்டு வந்தது.
உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பின்படி, விவசாய நிலங்களையும் கூட மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு’ – நிலத்தின் மீது உரிமையை இழந்த மக்கள்
‘ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டம்’ என்ற பெயரில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள சட்டத்தில் நிலம் வாங்குவதற்கு ’மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளர்’ என்ற நிபந்தனை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரில், வெளியாட்கள் முதலீடு செய்ய முடியும்.
அரசியல் சாசன பிரிவு 370 நடைமுறையில் இருந்தபோது, வெளியாட்கள் நிலத்தை வாங்க முடியாத நிலை இருந்ததால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள குலாம் அஹ்மத் மிர் “காட்டிக்கொடுப்பதும் வஞ்சக அரசியலும் பாஜகவின் தனிச்சிறப்பாகும்” என்று கூறியுள்ளார்
மத்திய அரசுக்கு மக்களின் எண்ணம் குறித்து கவலை இல்லை என்ற கூறிய அவர் “ஒரு சார்பாகவும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் மத்திய அரசு முடிவெடுக்கிறது” என்று கூறியுள்ளார்.
புதிய சட்டங்கள் மக்களின் உரிமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியுள்ள ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம் அஹ்மத் மிர் , ஜம்மு காஷ்மீருக்கு எதிரான இந்த முடிவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது என கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.