Aran Sei

சிறுபான்மையினர் மீது தேச துரோக வழக்குகள்: முன்னணியில் கர்நாடகா

Image Credits: The Hindu

பாஜக ஆளும் கர்நாடகாவில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தேசத்துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன.

நேற்று, வெளியிடப்பட்ட தேசிய குற்றப் பதிவு ஆணையகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி, கர்நாடகாவில், 2019-ல் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தேசத்துரோக வழக்குகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த காலகட்டத்தில், கர்நாடகாவில் 23 பேர் மீது 22 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் உள்ள பல இடங்களில் பதிவான வழக்குகளை ஒப்பிடும்போது மிக அதிகமாக உள்ளது.

அரசுக்கு எதிரான பிற குற்றங்கள் தொடர்பாக 14 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஆகையால் அரசுக்கு எதிரான குற்றங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை 36 ஆக உயர்ந்தது. இது 2019-ம் ஆண்டில் நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் அதிகம்.

விவேகத்தின் பற்றாக்குறை

பல தேசதுரோக வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் எஸ்.பாலன், தேசதுரோக வழக்குகளை தாக்கல் செய்யும்போது மாநில (கர்நாடகா) காவல்துறை விவேகத்தை இழந்துவிடுகிறது என்று கூறியுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

“உடனடியாக இந்த வழக்குகள் பதியப்படுகின்றன. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது, ‘​​ஃபிரீ காஷ்மீர்’ (சுதந்திரமான காஷ்மீர்) பதாகையை வைத்திருந்ததற்காக ஒரு நபர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று முழங்கியதற்காக மற்றொரு நபர் மீது வழக்கு பதியப்பட்டது. கீழ் நீதிமன்றங்களும் இதனை சரியாக ஆய்வு செய்வதில்லை,” என்று பாலன் கூறியுள்ளார்.

மத்தியில் தற்போதுள்ள ஆட்சியை விமர்சிப்பவர்களை குறிவைத்து தேசத்துரோக வழக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார். “சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இலக்குகளாக உள்ளார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

யுஏபிஏ

இருப்பினும், என்சிஆர்பி தரவு மற்றொரு போக்கையும் சுட்டிக்காட்டுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967, நாட்டின் பிற பகுதிகளில் இது போன்ற குற்றங்களைச் சமாளிக்க பயன்படுத்தப்படும் சட்டமாகத் தெரிகிறது, ஆனால் கர்நாடகாவின் நிலை வேறாக உள்ளது.

தமிழ்நாடு 270 யுஏபிஏ வழக்குகள் பதிவுசெய்தது. மணிப்பூர் – 306, மற்றும் ஜம்மு-காஷ்மீர் 255 வழக்குகளை பதிவு செய்திருந்தாலும், கர்நாடகா யுஏபிஏ கீழ் 7 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

“தற்போது, கர்நாடக காவல்துறையினரும் இந்த ட்ரெண்டுக்கு ஏற்றபடி வேகமாக மாறிவருகிறார்கள். டி.ஜே.ஹல்லி போராட்டக்காரர்கள் மீது யுஏபிஏவின் கீழ் எப்படி வழக்கு பதியப்பட்டது? அவர்கள் தடைசெய்யப்பட்ட எந்தவொரு அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல. இது குற்றத்திற்கு பொருத்தமற்ற சட்ட நடவடிக்கை,” என்றும் பாலன் கூறியுள்ளார்.

முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் குற்ற விகிதம் குறைந்த அளவில்தான் அதிகரித்துள்ளது. தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஒரு லட்சம் மக்கள் தொகையில் 248.1 என்ற குற்ற விகிதத்தை அந்த மாநிலம் பதிவு செய்தது. நாட்டின் பிற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த சதவிகிதம் குறைவு தான்.

ஒரு லட்சம் மக்களுக்கு 1.6 என மிகக் குறைந்த குற்ற விகிதமாக பதிவாகியுள்ளது. பீகார் மற்றும் தமிழ்நாடு மட்டுமே இந்த குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளன.

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள்

எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989-ன் கீழ் மிக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை பதிவுசெய்யும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. 2019-ல் பட்டியல் சாதியினருக்கு எதிராக நடந்த வன்முறைகள் தொடர்பாக 1,504 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018-ல் 1,325 வழக்குகள் பதிவாகின.

கடந்த ஆண்டவிட சற்று அதிகமாக, பழங்குடியினருக்கு எதிராக நடந்த வன்முறைக்கு எதிராக 392 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது, பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைகளை பதிவு செய்வதற்கு கர்நாடக காவல்துறையினர் காட்டும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்