Aran Sei

லவ் ஜிகாத்தைத் தடுக்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா

credits : scroll

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா “லவ் ஜிகாத்” எனும் பெயரில் நடக்கும் மதமாற்றத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மங்களூரில் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை `லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

சமீபத்தில் கர்நாடகாவில் திருமணத்திற்காக மதம் மாறுபவர்களைத் தடைசெய்யும் விதமாக மதமாற்ற தடைச் சட்டத்தை அரசு இயற்றும் என்று கர்நாடக அமைச்சரும் பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளருமான ரவி தெரிவித்திருந்தார்.

“எங்கள் சகோதரிகளின் கௌரவத்திற்குத் தீங்கு விளைவிக்கும் விதமாக ஜிகாதிகள் நடந்துகொண்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்றும் ”இச்சட்டத்தின் படி தண்டனைகள் கடுமையாகவும் விரைவாகவும் வழங்கப்படும்” என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று கர்நாடகா மாநிலத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றுவதற்கு முன்பு மற்ற மாநிலங்கள் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாள்கின்றன என்பதைக் கூர்ந்து கவனித்து வருவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஒரு வாரமாக கர்நாடக அமைச்சரவை உறுப்பினர்கள் லவ் ஜிகாத் குறித்த விவாதங்களை நடத்தியதாக தி இந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும் கர்நாடக உள்துறை அமைச்சர் “இந்தியாவில் கொஞ்சம் காலமாக லவ் ஜிகாத் என்பது இருந்து வருகிறது. இது சமுதாயத்திற்கே தீங்கு” எனக் கூறியுள்ளார். மேலும் இதற்கு எதிராகச் சட்டத்தை உருவாக்க அனைத்து மாநிலங்களும் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களான உபி, ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் லவ் ஜிகாத்தைத் தடுப்பது குறித்தான சட்டத்தைச் சிந்தித்து வருவதாகக் கூறியுள்ளார்.

இதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் சட்ட வல்லுநர்களிம் ஆலோசனைகள் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். லவ் ஜிகாத் எனும் பெயரால் நடந்துகொண்டிருக்கும் மதமாற்றங்களைத் தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மத்திய அரசும் லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் இயற்ற திட்டமிட்டிருப்பதாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியதாக என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முதன் முதலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், “லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும்” என உபியில் நடந்த தேர்தல் பிராச்சாரத்தில் கூறியுள்ளார். மேலும் “லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஒரு முடிவை எடுப்பதாக” யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உபியைத் தொடர்ந்து தற்போது ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா எனப் பாஜக  ஆளும் மாநிலங்கள் அனைத்தும் லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் இயற்ற வேண்டிய முனைப்பில் செயல்படுகின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்