Aran Sei

இந்தி தின கொண்டாட்டம் – கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இந்தி திணிப்பையும் இந்தி தின கொண்டாட்டத்தையும் எதிர்த்து கன்னட கூட்டமைப்பினர் நடத்திய ஆர்பாட்டத்தில் க்ரந்திவீரா சங்கொலி ரயன்னா ரயில் நிலையத்தில் இருந்த இந்தி பெயர் பலகைகள் உடைத்து எறியப்பட்டன.

கண்டை அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் (நன்றி : தி ஹிந்து )

1949-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி மொழியாக இந்தி தேர்வு செய்யப்பட்டது. அதை குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி ’இந்தி திவாஸ்’ என்கிற பெயரில் இந்தி மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சமீப காலமாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் இந்தி திவாஸ் கொண்டாடப்படுவதற்கு எதிராக கன்னட நவநிர்மாண் சேனா, கன்னட ரக்‌ஷன வேதிகே போன்ற அமைப்புகள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நன்றி : தினமலர்

கன்னட கூட்டமைப்பு சார்பில் மைசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி தினம் கொண்டாடப்படுவதை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ராம்நகர், மாண்டியா, ஹூப்ளி போன்ற மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் முற்றுகை போராட்டங்கள் நடந்தன.

நன்றி : தினத்தந்தி

பெங்களூரு நகரத்தின் க்ரந்திவீரா சங்கொலி ரயன்னா ரயில் நிலையத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது ரயில் நிலையத்தின் பெயர் பலகைகளில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை போராட்டக்காரர்கள் உடைத்து எறிந்தனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

நன்றி : the news minute

கர்நாடகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தி தின எதிர்ப்பு போராட்டத்திற்கு அம்மாநிலத்தில் உள்ள தமிழ் மற்றும் தெலுங்கு அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளன.

கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி தின கொண்டாட்டம் என்பது இந்தித் திணிப்பின் ஒரு அங்கம்தான். கன்னடர்கள் இந்தி திணிப்பையும் இந்தி தினத்தையும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்தி தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் சாசனத்தில் அவ்வாறு எங்குமே குறிப்பிடப்படவில்லை. மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் முன் இத்தகைய போக்கை நிறுத்திக்கொள்ளுங்கள். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி தினத்தைக் கொண்டாடுவது ஏன்? அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாக ’எங்களுக்கு ஹிந்தி தெரியாது. வெளியே போ. நாங்கள் கன்னடர்கள். நாங்கள் திராவிடர்கள்’ என்ற வாசகத்துடன் #Serveinmylanguage என்ற ஹேஷ்டேக்-ஐ இணைத்து பலர் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்