Aran Sei

நீதிமன்றத்தின் துணிச்சல்தான் குடிமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் – கபில் சிபல்

Photo Credit : PTI

த்தரப்பிரதேசம் ஹத்ராஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டு, கொடூரமான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, 15 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச போலீஸ் அவரது உடலைக் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமலேயே எரியூட்டினர். இதை எதிர்த்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவாகவும், போலீஸ் தடைகளைத் தாண்டி, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தி வதேராவும் கிராமத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இது தொடர்பாகவும் பிற சாதி, மத வன்முறைகள் தொடர்பாகவும் தி ஹிந்து நாளிதழில் கருத்துரை எழுதியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல். அவர் உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றுகிறார்.

“கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் உடலை, அவரது குடும்பத்திற்குத் தெரிவிக்காமலேயே, அதிகாலை 2.30 மணிக்கு ரகசியமாக போலீஸ் எரித்துவிட்டதை எப்படி விளக்குவது?” என்றும்

“அந்தப் பெண்ணின் குடும்பம் அவர்களது மகள் என்ன நிலையில் காணப்பட்டார் என்பது பற்றிக் கொடுத்த தகவல்களையும், அந்தப் பெண் இறக்கும் போது கொடுத்த வாக்குமூலத்தையும் மீறி, பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று ஒரு விசாரணை அமைப்பு கூறுவதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றும் கபில் சிபல் தன் கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான சதிக் குற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி விடுதலை செய்திருக்கிறது.

இதைக் குறித்து எழுதும் போது, கபில் சிபல் “உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்பு அமர்வால் பொதுவெளியில் நடத்தப்பட்ட குற்றச் செயல் என்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு குற்றச் செயல் தொடர்பான, சதித் திட்டத்தையும், சதியாளர்களையும் ஒரு நீதிமன்றத்தால் அடையாளம் காண முடியவில்லை என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது” என்று கேட்டுள்ளார்.

அவர் தனது கருத்துரையில் “2014 முதலே சாதி ரீதியிலான கிரிமினல் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. தலித்துகள் பலமுறை மேல் ஆதிக்க சாதி வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதிகார கட்டமைப்பில் பொதிந்துள்ள சாதிய தொடர்புகளின் காரணமாக அரசு எந்திரம் தமக்குப் பக்கபலமாக நிற்கும் என்று குற்றவாளிகள் நம்புகின்றனர்” என்று கூறியுள்ளார்.

“மத அடிப்படையிலான குற்றங்களும் அதிகரித்துள்ளன. ஒரு பெரும்பான்மைவாத அரசின் கீழ் வாழும் சிறுபான்மையினருக்கு அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாக உள்ளன. ஏனென்றால், நடப்பில் உள்ள பெரும்பான்மைவாத கலாச்சாரம் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது. அது வன்முறை பழிவாங்கல்களாக பலமுறை வெளிப்படுகிறது” என்கிறார், கபில் சிபல்.

உத்தரப்பிரதேசம் தாத்ரிக்கு அருகில் உள்ள பிசாரா கிராமத்தில், 2015-ம் ஆண்டில் முகமது அக்லாக் என்ற 52 வயதானவரை ஒரு கும்பல் தாக்கிக் கொலை செய்தது. அவர் ஒரு பசுவைக் கொன்று விட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் அவரை அடித்துக் கொன்றனர்.

2016-ம் ஆண்டு ஜூலை மாதம், கொலை செய்யப்பட்ட அக்லாக் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

இந்தக் குற்றம் தொடர்பாக 19 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் ஒருவர் உள்ளூர் பாஜக தொண்டர் சஞ்சய் ராணாவின் மகன் விஷால் சிங் ராணா. அவருடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்ட 16 பேர் 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்ட தேர்தல் பேரணிகளில் பங்கேற்க அழைக்கப்பட்டனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2018-ம் ஆண்டில் ஆசிபா பானு என்ற 8 வயது பெண் ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா கிராமத்தில் ஒரு கோயிலில் கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 பேரில் 6 பேர் நீதிமன்றத்தால் குற்றம் உறுதி செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அமைச்சர்கள் கலந்துகொண்டது சர்ச்சையைக் கிளப்பியது என்று பிபிசி செய்தி அறிக்கையில் பதிவாகியுள்ளது.

இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக கபில் சிபல் “முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்ட குற்றத்திலும், கத்துவா பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கிலும் அரசு எந்திரம் பாரபட்சமுடையதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையைக் காட்டாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது கடுமையைக் காட்டுவதாகவும் நடந்துகொள்வதாகத் தன்னை காட்டிக்கொண்டது” என்று கூறியுள்ளார்.

“இந்திய அரசு கலாச்சார, மதவாத, அரசியல் சாயத்துடன் நிகழ்த்தப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கபில் சிபல் தன் கட்டுரையின் இறுதியில், “இது இந்தக் குடியரசுக்கான ஒரு எச்சரிக்கை மணி. வெளிப்படையான பாரபட்சம் காட்டும் முதுகெலும்பு இல்லாத நமது அரசு நிறுவனங்களில் ஒரு சில இந்த மோசமான நிலைமைக்கு நம்மை இட்டு வந்துள்ளன. அரசின் செயல்பாடுகள் மீது குடிமகனின் நம்பிக்கை இழக்கச் செய்யும் அத்தகைய விதிமீறல்களை எதிர்கொண்டு கையாள்வது நீதிமன்றத்தால் மட்டுமே முடியும். நமது எதிர்காலம், நடந்துகொண்டிருப்பதை வெளிப்படையாக அங்கீகரிக்கும் நீதிமன்றத்தின் துணிச்சலையே சார்ந்திருக்கிறது” என்று முடித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்