Aran Sei

டெல்லி கலவரம் – மாணவர் தலைவர் கலிதாவுக்கு ஜாமீனை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் அமைப்பின் தலைவர் தேவங்கனா கலிதாவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்த செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளதாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லிக் காவல்துறை சார்பாக ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ, கலிதா செல்வாக்கு மிகுந்த நபர் என்றும், அவரை வெளியேவிட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்.

“ஜாமீன் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. அவர் எங்கும் ஓடிப்போகப் போவதில்லை” என்று நீதிபதி அசோக் பூஷன் தெரிவித்ததாக லைவ் லா கூறுகிறது.

கலிதா செல்வாக்கு மிகுந்த நபர் என்பதை மீண்டும் வழக்கறிஞர் எஸ்.வீ.ராஜூ சுட்டிக்காட்டியபோது, “அது மட்டுமே ஜாமீனை நிராகரிக்கப் போதுமான காரணமா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதாக லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை, கலிதா சாட்சியைக் கலைக்க முற்பட்டால் காவல்துறை, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோர முடியும், என்பதை நீதிபதி அசோக் பூஷன் சுட்டிக்காட்டியுள்ளார்

கலிதா, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் தூண்டிவிடும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதற்கான எந்த ஆதாரத்தையும் காவல்துறையினர் வழங்கவில்லை என்று குறிப்பிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த செம்படம்பர் 1ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது.

டெல்லிக் காவல்துறை வழங்கிய வழக்குப் புத்தகம், பென் ட்ரைவ் ஆகியவற்றை ஆராய்ந்த நீதிமன்றம், அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த போராட்டத்தில் கலிதா கலந்துகொண்டது உறுதி என்றாலும், அவர் கலவரத்திற்குத் தூண்டினார் மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காவல்துறை சமர்ப்பிக்கவில்லை என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது.

“சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்ப்கு புத்தகத்தையும், பென்ட்ரைவ்வையும் நான் ஆய்வுசெய்தேன். அமைதி வழியில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில் அவரும் இருந்தார். அரசியல் சாசனத்தின் 19வது பிரிவின்படி, அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாகும்.” என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், டெல்லியின் ஜஃப்ராபாத் பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கலிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 22 மற்றும் 23ஆம் தேதிகளில், ஜஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் திரட்டிக் கலவரத்தைத் தூண்டினார் என்றும் அதனால் ஏற்பட்ட வன்முறையில் அரசு மற்றும் பொதுச் சொத்திற்கு சேதம் ஏற்பட்டதுடன் உயிர் பலிகளும் ஏற்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாலியல் சமத்துவத்திற்காகப் போராடும் ‘பின்ஜ்ரா டோட்’ என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் கலிதாவும் ஒருவர். கடந்த மே 23 ஆம் தேதி கலிதாவும் அவருடைய நண்பர் நடாஷா நர்வால் என்பவரும் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பிறகு, டெல்லிக் கலவரத்தின் பின்னால் உள்ள சதித்திட்டம் தொடர்பாக குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்து மீண்டும் கைது செய்தனர்.

முன்னதாக, தன் மீதான வழக்கு தொடர்பாக, டெல்லிக் காவல்துறையினர் ஊடகங்களுக்குச் செய்தி வழங்குதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கலிதா தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், அதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தேவங்கனா கலிதா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் மகளிரியல் கல்வி மையத்தில் (Centre for women’s studies) இளம் முனைவர் பட்ட ஆய்வாளராகப் படித்து வருகிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்