Aran Sei

பீமா கோரேகான் பாடகர்கள் கைதுக்குக்கான காரணம் – மோடியை விமர்சித்த பாடல்

ரேந்திர மோடிக்கு எதிராக பாடல்கள் பாடியதால் கபீர் கலா மஞ்ச் குழு பாடகர்கள் கைது செய்யப்பட்டார்கள் என மும்பை உயர்நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் போர் நடந்து இருநூறு ஆண்டுகள் நிறைவானதையொட்டி, 2017 டிசம்பர் 31 அன்று புனேவில் பார்ப்பனர்கள் மேலாதிக்கம் உள்ள சனிவார்வாடா எனும் இடத்தில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து வெடித்த வன்முறைக்கு, நிகழ்வில் பேசிய செயற்பாட்டாளர்களே காரணம் என வலது சாரியான துஷார் தம்குடே அளித்த புகாரில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கபீர் கலா மஞ்ச் எனும் கலாச்சார கலைக் குழுவை சேர்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் பாடகர்களான சாகர் கோர்கே (32), ரமேஷ் கைசோர் (38) ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடக்கம்.

பாடகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது,   நரேந்திர மோடியையும், அரசின் திட்டங்கள் சிலவற்றையும் விமர்சித்ததனால் தான் இருவரும் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவித்தது.

கபீர் கலா மஞ்ச் குழுவினர் மக்களுக்கு எதிரான அரசின் திட்டங்களை விமர்சித்து பாடல் பாடி பிரச்சாரம் செய்வது வழக்கமானதே. காங்கிரஸ் அரசையும் கூட இக்குழுவினர் விமர்சித்துள்ளனர்.

“என் பெயர் பக்தேந்திர மோடி. என் பேச்சு எளிமையானது. என் வாழ்க்கை எளிமையானது. நான் அணியும் கோட் லட்சங்களில் தான் இருக்கும்” என நரேந்திர மோடியை விமர்சித்து பாடகர்கள் பாடிய பாடலின் ஆங்கில மொழியாக்கத்தை நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ  சமர்ப்பித்துள்ளது. முழுப்பாடலும் மொழிபெயர்க்கப்படாமல் பாடலின் சில பகுதிகளை மட்டுமே மொழியாக்கம் செய்து என்.ஐ.ஏ சமர்ப்பித்துள்ளது.

மேலும், கபீர் கலா மஞ்ச் பாடகர்கள் இருவரும் நக்சல் தலைவர் மிலிந்த் டெல்டும்ப்டேவுடன் தொடர்பில் இருந்ததாக சில சாட்சியங்களை காண்பித்து, இருவரும் நகரங்களில் நக்சலிசத்தை பரப்ப திட்டமிட்டதாக  புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டு இதற்கு முன்னரே வேறொரு குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காக செயற்பாட்டாளர்கள் இருவரும் ஏற்கனவே 2013 முதல் 2017 வரை சிறை தண்டனை அனுபவித்த பிறகும், என்.ஐ.ஏ மீண்டும் அதை தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது.

பீமா கோரேகான் எல்கர் பரிஷத் வழக்கில் கவிஞர் வரவர ராவ், கௌதம் நவ்லாகா, சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன அல்லது நிலுவையில் வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்