Aran Sei

“மக்களின் நம்பிக்கையே நீதித்துறையின் பலம்” – உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா

Credits The quint

ஆகஸ்டு மாதம் உயிரிழந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர் லக்ஷ்மணனுடைய இரங்கல் சந்திப்பு நிகழ்வில் பேசிய நீதிபதி ரமணா, மக்களுக்குச் சட்டத்தின் மீது ஏற்படும் நம்பிக்கைதான் நீதித்துறையின் மிகப்பெரிய பலம் எனக் கூறினார்.

கடந்த வாரம், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக உச்சநீதி மன்ற நீதிபதி ரமணா செயல்படுவதாக புகார் அளிக்கும் வகையில் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது பொறுப்பற்ற ரீதியில் குற்றம் சுமத்தியுள்ளதாக ஜெகன் மோகனின் செயலுக்கு நீதிபதிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்களைக் கூட்டி பொதுவில் வெளியிட்டதற்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக நீதிபதிகள் குரலெழுப்பியிருந்தார்கள்.

இதனிடையே, இரங்கல் நிகழ்வில் பேசிய நீதிபதி ரமணா, “நம்பிக்கை, உறுதித்தன்மை, ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஆகியவற்றைக் கட்டளையிட்டு அடைந்துவிட முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு நீதிபதி தன்னுடைய கொள்கைகளில் உறுதியுடனும் முடிவுகளில் துணிகரமாகவும் இருக்க வேண்டும். எல்லா வகையான அழுத்தங்களையும் முரண்பாடுகளையும் எதிர்கொண்டு அனைத்துத் தடைகளையும் தைரியத்துடன் எதிர்த்து நிற்கும் திறன் நீதிபதிக்கு இருக்க வேண்டும்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த தலைமை நீதிபதியாக வர இருக்கும் நீதிபதி ரமணா, சிறந்த வாழ்வுக்கான அம்சங்களாகப் பணிவு, பொறுமை, இரக்கக் குணம், பணியில் நெறிமுறை மற்றும் தொடர்ந்து கற்றலின் வழியாக முன்னேற்றம் அடைவது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் நீதிபதி லக்‌ஷ்மணனை நினைவுகூர்ந்து, இதுவரை கண்டிராத சிறந்த நீதிபதிகளில் ஒருவராக அவர் விளங்கியதாக ரமணா தெரிவித்துள்ளார்.

நீதிபதி லக்‌ஷ்மணன், கொள்கைகளை தோள்களில் சுமந்திருந்தார் என்பதைக் குறிப்பிட்டு, “கொள்கைகளே நம்முடைய மிகப்பெரிய செல்வம்” எனவும் நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், “நீதிபதி லக்‌ஷ்மணனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்