Aran Sei

பிரதமரால் கிடைத்த ராமர் கோவில் தீர்ப்பு – ஜே.பி.நட்டா

Image Credits: DNA India

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் வழக்கில் விசாரணையைத் தொடங்கி ஏகமனதாகத் தீர்ப்பை வழங்கியது என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

பீகாரின் லக்கிசரயில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜே.பி.நட்டா, ராஷ்டிரிய ஜனதா தளம் அளித்த வேலைவாய்ப்பு வழங்குவதற்கான வாக்குறுதியை விமர்சித்துள்ளார். யாரால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததோ அவர்களே இப்போது வேலைவாய்ப்பைக் குறித்து பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

“சட்டவிரோதம் என்பது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் இயல்பு. பீகார் மக்களுக்கு அவர்கள் செய்த துரோகத்துக்கு அவர்கள் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்கள் தற்போதும் அதே நோக்கங்களைதான் கொண்டுள்ளார்கள் என்பதை இது குறிக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியுடன் ஆட்சியில் இருக்கும்போது நல்லாட்சியை அடைய முடியாது என்பதை நிதீஷ் குமார் அறிந்திருந்தார். இதனால்தான் அவர் அவர்களுடனான கூட்டணியில் இருந்து விலகிப் பாஜகவுடன் இணைந்தார்,” என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

ராமர் கோயில் பிரச்சினையைக் காங்கிரஸ் நீட்டித்ததாகக் குற்றம் சாட்டிய பாஜக தலைவர், கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டார்.

“கபில் சிபல் மூலம் காங்கிரஸ் கட்சி ராம் ஜனம்பூமி மீது தீர்ப்பை வழங்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இது போன்ற திசைதிருப்பும் தந்திரோபாயங்கள் தான் காங்கிரஸ் செயல்படும் முறை. மோடிஜி ஆட்சிக்கு வந்த பின்னரே உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் வழக்கில் விசாரணையைத் தொடங்கி ஏகமனதாகத் தீர்ப்பை வழங்கியது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா பேரிடரில் போது 80 கோடி மக்களுக்கு, மார்ச் முதல் தீபாவளி மற்றும் சாத் பூஜை வரை, ஐந்து கிலோ கோதுமை/அரிசி மற்றும் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு வகைகளை வழங்கும் பணியை மோடிஜி மேற்கொண்டார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ட்வீட்டர் பயனாளிகள் பலர் பிரதமரின் பிறந்தநாளை தேசிய வேலையின்மை நாளாகக் கடைபிடித்தனர். நேற்று பீகார் சென்ற பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் #gobackmodi எனும் ஹாஷ்ட்க் ட்ரெண்ட் ஆனது. இதே போல், ராமர் கோயில் தீர்ப்பு குறித்தும் பலர் தங்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்