Aran Sei

காஷ்மீர் – 24 மணி நேரம் போலீஸ் காவலில் – பத்திரிகையாளரின் அனுபவம்

அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கிய ஒன்பதாம் நாள் நான் கைது செய்யப்பட்டேன்: ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை

“நான் பிடித்து வைக்கப்பட்டிருந்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது. ஆனால், நான் ஏன் ஒரு போலீஸ் நிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தேன் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை.”

நான் எனது ஆறு மாதப் பெண் குழந்தை சாவ்தா பின்டி இர்ஃபானைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க முயன்றுகொண்டிருந்தேன். தொலைபேசிகள் ஒலிக்கவில்லை; இணையம் இல்லை. நேரம் சரியாக இரவு 11:40. எனது சகோதரி கீழே இருந்து இராணுவம் நம் வீட்டிற்குள் வந்திருப்பதாக அலறினாள்.

அது, 2019, ஆகஸ்ட் 14, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தின் தனக்கெனத் தனி அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அனைத்துத் துறைகளிலும் சட்டத்தை இயற்றிக்கொள்ளும் உரிமையையும் கொடுத்த இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 ஐ நடுவண் அரசு நீக்கிய 9-ம் நாள்.

காஷ்மீர்: உரிமைகள் மறுக்கப்பட்டதன் நினைவு நாள் -ஆகஸ்ட் 5

நான் படுக்கையிலிருந்து எழுந்து வந்தேன். என் மனைவியும் என்னோடு வந்தாள். எங்கள் குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு நாங்கள் சென்றோம். நான் வாசலுக்கு வந்த போது ராணுவத்தினர் குழுவாக இருப்பதைப் பார்த்தேன்.

“நீங்கள்தான் இர்ஃபான் மாலிக்கா?” என ஒரு மூத்த அதிகாரி கேட்டார்.

“ஆம்” எனப் பதிலளித்தேன் நான்.

“நீங்கள் காவல் நிலையம் வர வேண்டும்” என்றார் அவர்.

“நான் ஒரு பத்திரிகையாளன்” என்று நான் கூறியதை அவர் கேட்காமல் அவர் மீண்டும் நான் போக வேண்டும் என்று சொன்னார்.

என் பெற்றோர்கள் அந்த அதிகாரியிடம் கெஞ்சினர். நாளை கண்டிப்பாக வருவான் என உறுதி அளித்தனர். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.

இறுதியில் என்னோடு என் பெற்றோர்கள் கூட வர நாங்கள் தென் காஷ்மீரில், எங்கள் வீட்டிலிருந்து 500 மீ. தூரத்தில் உள்ள ட்ரால் காவல் நிலையம் சென்றோம். நான் வீட்டை விட்டு வரும்போது என் மனைவி மூர்ச்சை ஆகிவிட்டாள். என் உடன்பிறந்தவர்கள் கண்ணீர் விட்டனர். ஆனால் எங்கள் குட்டிக் குழந்தை என் தாலாட்டில் தூங்கிவிட்டிருந்தது.

மணி 12 ஆகிவிட்டது. சாதாரணமாக அந்த நேரத்தில் என் சொந்த ஊர் ட்ரால் அமைதியாகிவிடும். நான் காவல் நிலையம் செல்லும் போது நாய்கள் குரைக்கும் ஒலியையும் இராணுவத்தின் காலணிச் சத்தத்தையும் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. நாங்கள் ராணுவத்தினர் சூழ நடந்தோம்.

“அவர்கள் என்னையும் என் பெற்றோரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவார்கள்” என நினைத்தேன். என்னுடைய பணியில் மக்கள் எப்படி இருட்டில் கொல்லப்படுகிறார்கள் எனப் பல செய்தி அறிக்கைகளை எழுதி உள்ளேன்.

காஷ்மீரில் ஹிஸ்புல் கமாண்டர் சுட்டுக்கொலை – மிகப்பெரிய வெற்றி என போலீஸ் அறிவிப்பு

எனது தந்தை, “ஒருவேளை காவல் அதிகாரி ஆகஸ்ட் 15-ம் தேதி்க்கு அல்லது சுதந்திர தினத்துக்கு ஏதாவது செய்திக் கட்டுரை எழுதுவதற்காக அழைத்திருக்கலாம்” எனக் கூறினார்.

நாங்கள் காவல் நிலைய வளாகத்தை அடைந்ததுமே சாதாரண உடையில் இருந்த இரு காவலர்கள் ஓடி வந்தார்கள். ஒரு துணை ராணுவப் படைவீரர் எங்களை நிழற்படம் எடுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நான் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டேன். அரசியல் அமைப்பு ரீதியான சுயாட்சியை இழந்த பிறகு கைதாகும் முதல் பத்திரிகையாளன் நானே.

நாங்கள் காவல் நிலையத்தை அடைந்ததும் என் அம்மா அந்தக் காவலர்களிடம் “இன்றிரவு அவனை விட்டு விடுங்கள். நாளை காலை அவன் வருவான்.” எனக் கெஞ்சி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்களோ, “இது எங்கள் கடமை. நாங்கள் அதற்குக் கட்டுப்பட்டவர்கள்” என்றே கூறினர்.

நான் கண்ணீரில் தவித்துக்கொண்டிருந்த எனது பெற்றோரை ஒருவாறு சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். பின்னர், மற்றவர்களைப் போல அன்றி நான் ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
அந்த அறையில் மூலையில் இருந்த ஒரு படுக்கையைக் காண்பித்தனர். எனக்கு இணையாகப் போடப்பட்டிருந்த இன்னொரு படுக்கையில் ஒரு காவலர் படுத்துக் கொண்டார்.

சற்று நேரம், சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து விளக்கை அணைத்து விட்டு என்னையும் தூங்கச் சொன்னார். அந்த இருட்டு அறையில் நான் எனது குட்டிப் பெண்ணைமிகவும் தேடினேன்.

அந்த மொத்த இரவிலும் வெறும் பத்து நிமிடங்கள்தான் நான் தூங்கினேன். என்னைச் சித்ரவதை செய்வார்களோ அல்லது காஷ்மீரை விட்டு வெளியே ஏதாவது சிறைக்குக் கூட்டிச் செல்வார்களோ எனப் பயந்து கொண்டிருந்தேன்.

‘ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு’ – நிலத்தின் மீது உரிமையை இழந்த மக்கள்

மறு நாள் காலை அமைதியின்றி, என் பெற்றோர்கள் வருகிறார்களா என ஆவலுடன் போலீஸ் நிலைய வாயிலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் நான் பிற கைதிகளைப் தேடிப் பார்த்தேன். அவர்கள் ஏதோ சுற்றுலா வந்திருப்பது போல நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தார்கள்.
அவர்கள் என்னை விட இளையவர்கள். ஒரே கூண்டில். ஆனால் எப்படியோ வேறு ஒரு உலகத்தில் இருந்தார்கள்.

கடந்த 20 நாட்களாக சிறையிலிருக்கும் ஒரு இளம் கைதியைக் காவலர்கள் வீட்டிற்குச் சென்று விட்டு மூன்று நாட்கள் கழித்து வருமாறு கூறினார்களாம். ஆனால், அவன் “நான் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை. கடைகள் அடைத்துக் கிடக்க, தொலைபேசி இல்லாமல், இணையமும் இல்லாமல் வெளியில் இருப்பதை விடச் சிறையில் இருப்பதே மேல்” என்று என்னிடம் கூறினான்.

நண்பகலில், என் பெற்றோரும், என் நண்பனும் வந்தனர். என் நண்பனின் தழுவலில் நான் உடைந்து போனேன்.

அவன் என்னிடம் அடிக்கடி பத்திரிகைத் துறை வேலையை விட்டு விடுமாறு அறிவுரைக் கூறிக்கொண்டே இருப்பான். “இர்ஃபான் நீ சுதந்திரமாக எழுதிக்கொண்டிருக்கிறாய். ஆனால் காஷ்மீரில் சுதந்திரமான ஊடகம் என்ற ஒன்று இல்லவே இல்லை.” என்று கூறுவான்.

ஒவ்வொரு முறை என் செய்தி அறிக்கை வெளியாகும் போதும் இந்த வரிகளை நான் நினைவு படுத்திக்கொள்வேன்.

சிறையில் இருக்கும் போது, பல்வேறு தடைகளையும் மீறித் தொடர்ந்து சார்பின்றிச் செய்திகளைத் தரும், உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுடன் உறவு இருப்பதை உணர்ந்தேன்.

இதற்கிடையில், ஊரடங்கு மற்றும் தகவல் இருட்டடிப்பு இருந்த போதும், என் பெற்றோர்கள், இந்தச் சிறையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ஶ்ரீநகருக்குச் சென்று, நான் வேலை பார்க்கும் என் பத்திரிகையின் தலைமை ஆசிரியரைச் சந்தித்து என்னுடைய கைது பற்றி அவரிடம் தெரிவித்து விட்டனர்.

நான் காவல் நிலையத்திற்குள்ளேயே இருந்த மசூதியில் எனது தொழுகையை முடித்து விட்டு என் அறைக்குத் திரும்பினேன். தனியாக இருந்த அந்த அறையிலிருந்து ஒரு மரத்தையும் வானத்தில் உள்ள மேகங்களையும் மட்டுமே என்னால் காண முடிந்தது.

வீட்டில், எனது அண்டை வீட்டுக்காரர்களும் நண்பர்களும் எனது விடுதலைக்காகக் கடுமையாக முயற்சித்துக்கொண்டிருந்தனர். எனது கைதை எதிர்த்து என் பகுதி மக்கள் ஒரு எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்தினர்.

எனது குடும்பம் ஸ்ரீநகர், லால் சௌக்கில் உள்ள பத்திரிகைகள் வளாகத்தை எப்படியோ சென்றடைந்தனர். ஆனால் அங்கு எனது `கிரேட்டர் காஷ்மீர்’ பத்திரிகை அலுவலகம் பூட்டியிருப்பதைக் கண்டனர். அங்கிருந்த ஒரே ஒரு வாயிற் காவலர், அவர்களை அருகில் உள்ள நான்கு நட்சத்திர ஓட்டலில் இயங்கும் ஊடக உதவி மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

அரசு உத்தரவுப் படி, கைபேசி, தொலைப்பேசி மற்றும் இணையம் உள்ளிட்ட அனைத்துத் தகவல் தொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டு விட்ட நிலையில் ஓரளவு தகவல் பரிமாறிக்கொள்ளும் ஒரே இடமாக அது இருந்தது. பத்திரிகையாளர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வந்தது.

எனது பெற்றோர்கள் ஒரு வழியாக அந்த இடத்தை அடைந்து, நடந்த கதையை அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினர். தொழில் முறை ஒற்றுமையின் அடையாளமாக உள்ளூர், தேசிய, அனைத்துலக ஊடகங்களிலும் எனது கைது பற்றிய செய்தி பரவலாக வெளியானது.

அன்று மாலை அரசு அதிகாரிகளின் செய்தியாளர் கூட்டம் நடந்த போது பல செய்தியாளர்களும் எழுப்பிய முதல் கேள்வி எனது கைது பற்றியதாகவே இருந்தது. அவர்கள் உடனடியாக என்னை விடுதலை செய்யக் கோரினர்.

“தெற்கு காஷ்மீரில் உள்ள எங்கள் பத்திரிகையாளர் ஒருவர் நேற்றிரவு பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பம் இங்கே வந்துள்ளது. அவர் ஏன் கைது செய்யப்பட்டார்? அவரை இன்னும் ஏன் விடுதலை செய்யவில்லை?” என வாஷிங்டன் போஸ்ட் நிருபர், ஜம்மு காஷ்மீரின் முதன்மைச் செயலாளர் லோகித் கன்சாலிடம் கேட்டார்.

“நள்ளிரவில் ஒரு பத்திரிகையாளர் வீட்டிற்குள் புகுந்து அவரை எப்படி கைது செய்தீர்கள்? அவர் என்ன குற்றவியல் குற்றவாளியா அல்லது பயங்கரவாதியா? எங்களுக்கு அவர் எப்போது விடுதலை செய்யப்படுவார் என்ற தெளிவான பதில் வேண்டும். இல்லையெனில் ஸ்ரீநகர் மணிக்கூண்டுக் கருகில் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.” என்று எச்சரித்தார், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர்.

நான் மறுநாள் இரவு 10:30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டேன். நான் வெளியில் வந்த போது, பல ஆண்டுகள் சிறையில் இருந்ததைப் போல் உணர்ந்தேன். உருது மொழியில் இருந்த சில ஆவணங்களில் கையொப்பமிடும்படி என்னிடம் கூறினர். அவை பிணைப் பத்திரங்கள் என நான் பின்னர் அறிந்துகொண்டேன்.

என்னைக் கைது செய்வது அமைதியைப் பாதுகாக்க அவசியமானது என அதில் எழுதப்பட்டிருந்ததை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. இப்போது ஓராண்டிற்கு மேல் ஆகியும் காவல் துறையினரோ அல்லது நிர்வாகத்திலிருந்தோ எவரும் அன்று நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பதற்கான காரணத்தை இன்றுவரை தெரிவிக்கவே இல்லை.

என்னை விடுதலை செய்த போது ஒரு காவல் அதிகாரி என்னை அரசியல் பற்றியோ பிரச்சனை பற்றியோ எழுதாமலிருக்குமாறு அறிவுரை கூறினார். “நீங்கள் கல்வி, சுற்றுச்சூழல் அல்லது உடல் நலம் குறித்து ஏதாவது கதை எழுதுங்கள். அரசியல் பற்றியோ மோதல் பற்றியோ எழுதாதீர்கள்,” என்றார் அவர்.

எனது குடும்பத்தினர் கூட இந்தத் தொழிலை விட்டு விடுமாறும் வேறு வேலை தேடிக் கொள்ளுமாறும் என்னிடம் கூறினார்கள்.

ஆனால் நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்.

– இர்ஃபான் அமின் மாலிக்

கட்டுரை & படங்கள் – நன்றி : thewire.in
மொழியாக்கம் செய்யப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்