Aran Sei

பெண் விரோத, தலித் விரோத கருத்துகள் – மனுதர்மத்தை எரித்த ஏபிவிபி

ஆர்எஸ்எஸின் மாணவ அமைப்பான ஏபிவிபியை சேர்ந்த மாணவர்கள், மனுதர்மத்தில் ‘இழிவான வாக்கியங்கள்’ இருப்பதாக கூறி, 2016-ம் ஆண்டு அதை எரித்துள்ளனர்.

சமீபத்தில், மனுதர்மத்தில் பெண்கள் பற்றி கூறப்பட்டிருப்பவற்றை மேற்கோள் காட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசிய காணொலி பாஜகவால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வைரலாகியது. அது பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று பாஜக பிரச்சாரம் செய்ததது. இது தொடர்பாக பாஜக சட்டப் பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் ஒரு ஆன்லைன் புகாரை அளித்தார்.

இதை தொடர்ந்து, மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி, விசிக சார்பில் தமிழ்நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. பல கட்சிகளையும் இயக்கங்களையும் சேர்ந்த தலைவர்கள், ஆர்ப்பாட்டத்திற்கும் திருமாவளவனிற்கும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதியைத் தடைசெய் – திருமாவளவன்

இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை (ஜே.என்.யூ) சேர்ந்த ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்த மாணவர்கள் , இந்து மத நூலான மனுதர்மத்தில் “இழிவான வாக்கியங்கள்”இருப்பதாக கூறி, அந்த வாக்கியங்கள் இடம் பெறும் பக்கங்களின் நகல்களை எரித்துள்ளனர் என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளம், 2016-ஆம் ஆண்டு, மார்ச் 9-ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. இப்போது மனுஸ்மிருதிக்கு ஆதரவாக திருமாவளவனை எதிர்த்து பிரச்சாரம் செய்து வரும் பாஜக ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளை பின்பற்றும் அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

“இன்று பெண்கள் தினம் என்பதனாலும்,  மனுதர்மத்தில் பெண்களுக்கு எதிராக உள்ள இழிவான கருத்துக்களை எதிர்ப்பதற்காகவும், அதனுடைய சில பகுதிகளை நாங்கள் எரித்திருக்கிறோம்” என்று ஜே.என்.யுவில் உள்ள ஏபிவிபி பிரிவின் துணைத் தலைவர் ஜடின் கோரையா கூறியுள்ளார் என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்துள்ளது.

‘இந்தியாவில் மனுஸ்மிருதி எதிர்ப்பே, பெண்ணுரிமை போராட்டம்’ – கவிதா கிருஷ்ணன்

பெண்களுக்கு எதிரான 40 இழிவான வாக்கியங்களை கொண்ட மனுதர்மத்தின் பக்கங்களை மாணவர்கள் எரித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

”2/213. இந்த உலகில் ஆண்களை கவர்ந்திழுப்பதே பெண்களின் இயல்பு.” மற்றும் “ 2/214. பெண்கள், தங்கள் வர்க்கத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும்.  அவர்கள், இந்த உலகில் வழிதவறிய ஆண்களை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள். ஒரு முட்டாளை மட்டுமல்ல, கல்வி பெற்ற ஒரு  புத்திசாலி மனிதனையும் கூட. இருவரும் ஆசையின் அடிமைகளாகிறார்கள்” போன்ற வாக்கியங்கள் அதில் இடம் பெற்றுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மனுதர்மத்தை அம்பேத்கரும் கொளுத்தினார் – ஆனந்த் டெல்டும்டே

சமீபத்தில் ஏபிவிபியை விட்டு வெளியேறிய பிரதீப் நர்வால், இந்த நிகழ்ச்சியின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவர். மனுதர்ம பக்கங்களை எரிப்பதற்கு முன், அந்த 40 வாக்கியங்களையும் வாசித்துக்காட்டியுள்ளார் என்று ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

“பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு இழிவு செய்யும் வகையில் உள்ள  இந்த 40 வாக்கியங்கள் எனக்கு பிரச்சனையாக இருக்கிறது. நான் சொல்வது தவறு என்று யாராவது நினைத்தால், அவர்கள் என்னிடம் இதைப் பற்றி விவாதிக்கலாம்.” என்று கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

சில ஆண்டுகளுக்கு முன், மனுதர்மத்தில் இருந்து  தலித் விரோத மற்றும் பெண்கள் விரோத கருத்துகள் உள்ள பகுதிகளை அகற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸின் இந்து பண்பாட்டு அமைப்பான சன்ஸ்கார் பாரதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்