Aran Sei

காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை – விடுதிகளில் அடைத்துவைக்கப்படும் வேட்பாளர்கள்

வேட்பாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாம்போரில் உள்ள வளாகம் - Image credit : indianexpress.com

ம்மு & காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்கள் தொடங்குவதற்கு 9 நாட்கள் இருக்கும் நிலையில் மத்திய அரசு 25,000 கூடுதல் பாதுகாப்புப் படைகளை அங்கு அனுப்பியுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தவுடன், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி, அவர்களை ‘கூட்டு தங்குமிடங்களுக்கு’ போலீசார் அழைத்துச் சென்று விடுகின்றனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு & காஷ்மீர் – ‘ எதிர்க்கட்சி ஒற்றுமையில் கடுப்பாகிறார் அமித் ஷா ‘

இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக இந்த இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அது தேர்தல் பிரச்சாரம் செய்வதை கடுமையாக மட்டுப்படுத்துகிறது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

புத்கம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அஷ்ரஃப் லோன், ரயீஸ் மாட்டு என்ற இரண்டு வேட்பாளர்களும் பீர்வா, காக் பகுதிகளுக்காக தமது வேட்புமனுக்களை தாக்கு செய்துள்ளனர். தங்களால் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் ஶ்ரீநகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் பீர்வா வேட்பாளர் ரயீஸ் மாட்டூ, நவம்பர் 16 அன்று வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அதே நாளில் ஶ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரை ஹோட்டலில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. “பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாத வேட்பாளர் நான்; இது எப்படி ஜனநாயகம் ஆகும்?” என்கிறார் அவர். அவரது தொகுதி ஹோட்டலில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

காக் தொகுதி வேட்பாளர் அஷ்ரஃப் லோன், சில நேரங்களில் போலீஸ் எல்லா வேட்பாளர்களையும் ஒரே வண்டியில் ஏற்றிச் சென்று 4 மணிக்குள் திரும்பி வரும்படி சொல்கிறது என்கிறார். “மதியம் 12 மணி அல்லது 1 மணி வாக்கில் வண்டி அனுப்பினால், 40 கிராமங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து விட்டு 4 மணிக்குள் எப்படி திரும்ப முடியும். அதுவும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வேட்பாளர்களையும் ஏற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

ஶ்ரீநகரின் புறநகர் பகுதியான பாம்போரில் உள்ள ஒரு வளாகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. சீருடை அணிந்த, சீருடை அணியாத போலீஸ்காரர்கள் வாசலில் காவல் காக்கின்றனர். உள்ளே தங்கியிருப்பவர்கள் வெளியில் செல்லக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லப்பட்டுள்ளது. கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை என்று ஒரு வேட்பாளர் புகார் தெரிவித்திருக்கிறார்.

“அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் தொடர்ந்து குழப்பத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. உள்ளூர் ஆளெடுப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. காஷ்மீரில் எப்போதுமே உள்ளூராட்சி தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்று ஒரு அதிகாரி கூறுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி பாஜக வேட்பாளர்களும் அத்தகைய பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர் கூறியிருக்கிறார். “கிட்டத்தட்ட எங்களது எல்லா வேட்பாளர்களும் பாதுகாப்பான இடங்களில்தான் உள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் காஷ்மீர் பகுதி தலைவர், நசீர் அலம் வானி, “எங்களது பல வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர், ஆனால் போட்டியாளர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.” என்று கூறியுள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி மெஹ்பூபா முஃப்தி “பாஜக அல்லாத வேட்பாளர்கள் சுயேச்சையாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணம் காட்டி அடைத்து வைக்கப்படுகிறார்கள். ஆனால், பாஜகவும், அதன் பதிலிகளும் முழு பாதுகாப்புடன் உலாவிக் கொண்டிருக்கின்றனர்.” என்று ட்வீட் செய்துள்ளார்

“அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுடன் பேசும் போது, இந்திய அரசு வளர்ப்பதாக கூறிய ஜனநாயகம் இதுதானா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

’ஜோ பைடனுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினேன்’ – பிரதமர் மோடி

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா, “பாஜகவுக்கும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட அரச விசுவாச கட்சிக்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்க ஜம்மு & காஷ்மீர் நிர்வாகம் பெரும் முயற்சிகளை செய்து வருகிறது. இதற்கு பாதுகாப்பை ஒரு சாக்காக பயன்படுத்துகிறது.” என்று ட்வீட் செய்துள்ளார்.

“பாதுகாப்பு நிலைமை, பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது என்றால் தேர்தல்களை அறிவிப்பதற்கு என்ன அவசியம்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாமல் என்ன மாதிரியான தேர்தல் ஜம்மு & காஷ்மீரில் நடத்தப்படுகிறது! நேற்று உள்துறை அமைச்சர் ட்வீட் செய்த பாதுகாப்பான, பயங்கரவாதம் இல்லாத ஜம்மு & காஷ்மீர் இதுதானா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்