Aran Sei

ஜியோ புறக்கணிப்பு – ரிலையன்ஸ், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கும் விவசாய சட்டங்களுக்கும் தொடர்பு என்ன?

"ஜியோவை புறக்கணிப்போம்" - Image Credit : indiatoday.in

புதிய விவசாய சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும் விவசாயிகளுக்கு விரோதமாகவும் உள்ளன என்று கூறி நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் அவற்றை எதிர்க்கின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அவற்றை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர். டெல்லி எல்லையில் கடந்த 19 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த விவசாய சட்டங்களினால் பயனடையவிருக்கும் அம்பானி, அதானி ஆகியோரின் நிறுவனங்களை புறக்கணிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் : சிபிஎம் புதிய அறிவிப்பு

“அம்பானி, அதானியை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தோடு ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளை ரத்து செய்யுமாறு விவசாயிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து #BoycottAmbaniAdani #BoycottRelianceJio போன்ற ஹேஷ்டேகுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. பல பயனர்கள், ஜியோ இணைப்பை வேறு சேவை நிறுவனத்துக்கு மாற்றியது பற்றிய விபரங்களை வெளியிட்டு வந்தனர்.

’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்

இந்நிலையில், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் போட்டியாளர்களான வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் மீது புகார் தெரிவித்து தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிராய்க்கு கடிதம் எழுதியுள்ளது. இரண்டு போட்டி நிறுவனங்களும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜியோவிலிருந்து தங்கள் சேவைக்கு மாறுமாறு வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதாக அது குற்றம் சாட்டியுள்ளது.

இந்த பொய்ப் புகாரை ஒதுக்கித் தள்ளுமாறு ஏர்டெல் டிராயிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வோடபோன், “இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு, எங்களது நற்பெயரை கெடுக்கும் வகையிலானது. எங்களைப் பற்றிய இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

டிசம்பர் 10-ம் தேதி டிராய்க்கு எழுதிய கடிதத்தில் ரிலையன்ஸ் ஜியோ, “ரிலையன்ஸ் விவசாய சட்டங்களின் மூலம் முறையற்ற ஆதாயத்தை பெறுவதாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ன” என்று குற்றம் சாட்டியுள்ளது.

இதன் விளைவாக, தனக்கு, “பெரும் எண்ணிக்கையிலான சேவை மாற்ற கோரிக்கைகள் வந்திருப்பதாகவும்” மாற்றத்துக்கான காரணமாக வாடிக்கையாளர்கள் , “ஜியோ சேவைகள் தொடர்பான புகார்களையோ குறைபாடுகளையோ குறிப்பிடவில்லை, மாறாக விவசாயிகள் போராட்டத்தையே ஒரே காரணமாக குறிப்பிடுகின்றனர்” என்று ஜியோ தெரிவித்துள்ளது.

Image Credit : thehindu.com
Image Credit : thehindu.com

ஜியோவின் குற்றச்சாட்டை கடுமையாக கண்டித்து ஏர்டெல் நிறுவனம் திங்கள் கிழமை டிராய்-க்கு கடிதம் எழுதியுள்ளது.

“சில போட்டியாளர்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்கு எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள், மிரட்டும் வழிமுறைகளை கையாள்கிறார்கள், என்று தெரிந்தும் நாங்கள் எங்கள் நிறுவனத்தை நற்பண்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தி வருகிறோம். அது தொடர்பாக நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ 38.2 கோடி வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 32.9 கோடி வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 32.5 கோடி வாடிக்கையாளர்களையும், பிஎஸ்என்எல் 11.9 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் தேதி ஜியோ மேடைகள் (Jio Platforms) நிறுவனம் ஜியோகிருஷி என்ற விவசாயிகளுக்கான ஆப்-ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து தரவுகளை திரட்டி அதன் மூலம் விவசாயிகளிடமிருந்து தனக்கு சாதகமான விலையில் விளைபொருட்களை வாங்குவதற்கு ரிலையன்ஸ் திட்டமிட்டிருந்தது என்று ஏக்தா பஞ்சாப் என்ற நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த விளைபொருட்களை,  மளிகை பொருட்களை விற்கும் தனது 11,000 ரிலையன்ஸ் ஃபிரெஸ் கடைகள் மூலம் விற்கவும், சர்வதேச சந்தையில் அதிக விலை பெறுவதற்காக பதுக்கி வைக்கவும் முடியும் என்று ஏக்தா பஞ்சாப் தெரிவிக்கிறது.

புதிய விவசாய சட்டங்கள் ஜியோகிருஷிக்கு வழி ஏற்படுத்தும் வகையில், “மின்னணு வர்த்தக மேடை” (Electronic Trading Platform) என்று 20 முறை குறிப்பிடுகின்றன. ஆனால், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் இச்சட்டங்கள் குறிப்பிடவில்லை. மின்னணு வர்த்தக நிறுவனங்கள் “நியாயமான வர்த்தக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று மட்டும் குறிப்பிடுகின்றன”

இவ்வாறு ஜியோகிருஷி விவசாயத் துறையில் தனது பெருமளவிலான வர்த்தகத்தை நடத்த உதவி செய்கின்றன விவசாயச் சட்டங்கள். ஜியோ பிளாட்பார்ம் (ஜியோ மேடைகள்) நிறுவனத்தில் சர்வதேச நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் கூகுள் மொத்தம் 20% முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோகிருஷி வாட்ஸ்அப் பணம் செலுத்தும் செயலியை விவசாயிகளுடன் தகவல் தொடர்பு செய்யவும், பணப் பரிவர்த்தனைகளையும் பயன்படுத்தவுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் நிறுவனம் பல கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய விவசாயச் சந்தையில் கால்பதிக்க உதவுகிறது.

அரசியல் ரீதியில் வலுவான ரிலையன்ஸ்-க்குச் சொந்தமான ஜியோ மேடைகள் நிறுவனத்தில் முதலீடு செய்த இரண்டு மாதங்களுக்குள் பேஸ்புக்குக்கு சொந்தமான வாட்ஸ்அப் பணம் செலுத்தும் செயலிக்கு ஒழுங்குமுறை ஒப்புதலை வழங்குவதாக ஜூன் 5-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது என்கிறது ஏக்தா பஞ்சாப்.

அதே ஜூன் 5-ம் தேதிதான் விவசாய சீர்திருத்தங்களுக்கான மூன்று அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனமானது பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுடன் இணைந்து, பாதுகாப்பற்ற விவசாயிகளிடமிருந்து கொள்ளை இலாபம் அடிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது என்று ஏக்தா பஞ்சாப் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்