Aran Sei

‘திரைத்துறையை கொச்சைப்படுத்தாதீர்’ – ஜெயா பச்சன் கண்டனம்

Credits: Scroll.in

நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க உறுப்பினர் ரவி கிருஷ்ணனுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜெயா பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கு குறித்து போஜ்புரி மற்றும் இந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும், உத்தர பிரதேசம் கோரக்பூர் மக்களவை உறுப்பிரான ரவி கிருஷ்ணன் நேற்று (செப்டம்பர் 16, 2020) மக்களவை அமர்வில் பேசினார்.

“திரையுலகிலும் போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறது. பலரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்து, அண்டை நாடுகளின் சதித் திட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.” என ரவி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான ஜெயா பச்சன் இன்றைய (செப்டம்பர் 17, 2020) அமர்வின் பூஜ்ஜிய நேரத்தில், ரவி கிருஷ்ணன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

”ஒரு சிலர் செய்த தவறுக்காக மொத்தத் திரைத்துறையும் களங்கப்படுத்தக் கூடாது. திரையுலகைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஒருவர் நேற்றைய மக்களவை அமர்வில் திரைத்துறைக்கு எதிராக பேசியது பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

“பொழுதுபோக்குத் துறை நாட்டில் 5 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும், 50 லட்சம் மக்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. பொருளாதாரம் பாதிப்படைந்து, வேலைவாய்ப்புகள் மிக மோசமாக இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் திரைத்துறை குறித்து சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக பேசப்பட்டு வருகிறது.” என்றார், ஜெயா பச்சன்.

”அரசின் அனைத்து நல்ல முன்னெடுப்புகளையும் திரைத்துறை தொடர்ந்து ஆதரித்து பேசியும் செயல்பட்டும் வந்துள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் திரைத்துறையினர் தாமாக முன்வந்து மக்களுக்கு பொருள் உதவி செய்கிறார்கள், சேவை புரிகிறார்கள். சர்வதேச அளவில் நாட்டுக்கு பெயரையும் அங்கீகாரத்தையும் திரைத்துறை பெற்றுத் தருகிறது“ என்றும் ஜெயா பச்சன் கூறினார்.

நடிகை கங்கனா இதுகுறித்து தனது ட்விட்டரில், ”எனது இடத்தில் உங்கள் மகள் சுவேதா அவருடைய பதின்ம வயதில் அடித்துத் துன்புறுத்தப்பட்டு போதைபொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போதும் நீங்கள் இதையே சொல்வீர்களா? தவறாக நடத்தப்பட்டு ஒரு நாள் அபிஷேக் [ஜெயா பச்சனின் மகன்] தூக்கில் தொங்கினாலும் கூடவா? எங்களுக்கும் இரக்கம் காட்டுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

இது குறித்து நடிகை டாப்ஸி தனது ட்விட்டரில், ”நாங்கள் என்றுமே போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில், அது குறித்த முன்னெடுப்புகளில் முன்னனியில் இருந்துள்ளோம். சரியான கருத்தை மிகச்சரியான இடத்தில் ஜெயா பச்சன் கூறியுள்ளார். மீண்டும் திரைத்துறையிலிருந்து ஒரு பெண் துணிவாக பேசியிருக்கிறார்.” என்று ஜெயா பச்சனை ஆதரித்து பதிவிட்டுள்ளார்.

“மிகச் சிலர் செய்யும் தவறுக்காக திரைத்துறையை கொச்சைப்படுத்தி பேசாமல், அரசு திரைத்துறையினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று கூறி தனது உரையை ஜெயா பச்சன் நிறைவு செய்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்