Aran Sei

ஜம்மு & காஷ்மீர் தேர்தல் – ” அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்தை, மக்கள் நிராகரித்தனர் “

குப்கர் கூட்டணி - Image Credit : thewire.in

ம்மு&காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல்களில் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது

ஜம்மு&காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டு, அதன் அரசியல் அமைப்புச் சட்ட, சிறப்புரிமைகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, நடைபெற்ற மாவட்ட கவுன்சில்களுக்கான தேர்தலில் குப்கர் ட்டணிக்கு 100 இடங்களுக்கு அதிகமாகவும் பாஜகவுக்கு 74 இடங்களிலும் வெற்றி கிடைத்துள்ளது.

காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சஜ்ஜத் லோன் தலைமையிலான மக்கள் மாநாடு கட்சி 7 இடங்களிலும், சிபிஎம்  5 இடங்களிலும், ஜம்மு & காஷ்மீர் மக்கள் இயக்கம் 5 இடங்களிலும், பாஜகவுக்கு நெருக்கமான 9 மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அப்னி கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

குப்கர் கூட்டணி, சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் அமைப்பு அந்தஸ்தை மாற்றியதை எதிர்த்து, காஷ்மீரின் முக்கிய கட்சிகளால் உருவாக்கப்பட்டது.

குப்கர் கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் 20 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளதாக என்டிடிவி தெரிவிக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 14 இடங்கள் வீதம் 20 மாவட்டங்களின் 280 இடங்களுக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு 25 நாட்களில் 8 கட்டங்களாக நடைபெற்றது.

ஜம்முவில் பாஜக 71 இடங்களிலும், குப்கர் கூட்டணி 35 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜம்மு பகுதியில் 37 இடங்களில் பாஜக 30 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குப்கர் கூட்டணி 72 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

“நாங்கள் காஷ்மீர் கட்சிகள் மட்டுமல்ல, காஷ்மீரிலும் ஜம்முவிலும் வலுவான ஆதரவு அடித்தளத்தைக் கொண்ட கட்சிகள்” என்று ஓமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

“பாஜக காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 இடங்களை வென்றிருப்பதை மிகைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஜம்மு பகுதியில் குப்கர் கூட்டணி 35 இடங்களில் வெற்றி/முன்னணி என்பதை ஏன் குறைத்து பேச வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில், “பாஜகவுக்கு காஷ்மீரில் இருக்கும் ஆதரவை விட எங்களுக்கு ஜம்மு பகுதியில் அதிக ஆதரவு உள்ளது” என்றும், “ஜம்முவுக்கும் காஷ்மீருக்கும் இடையேயான பிளவை நாங்கள் எங்களது கொள்கை மூலம் இணைத்துள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் புல்வாமாவில் வேட்பு மனு தாக்கல் செய்தவுடன், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட, மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் தலைவர் வகீத் பாரா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று என்டிடிவி தெரிவிக்கிறது.

“ஜம்மு & காஷ்மீர் மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்ததை நிராகரித்துள்ளார்கள்” என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்டி ட்வீட் செய்துள்ளார்.

“ஜம்மு & காஷ்மீர் மக்கள் குப்கர் கூட்டணிக்கு பெரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்