Aran Sei

ஜம்மு-காஷ்மீர் : `எங்களுக்கு ஒரு சிறிய இடத்தைக் கூட மறுப்பது நியாயம் இல்லை’ – சிபிஎம் ஆதங்கம்

Image Credits: The Print

ம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி, இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீட்டின் பட்டியலை இறுதிசெய்துள்ளது. மொத்தமுள்ள 27 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் (என்சி) மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (பிடிபி) தலா 8 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில், குப்கர் கூட்டணியைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜேகேபிசி) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை முக்கியக் கட்சிகளாகப் போட்டியிடுகின்றன.

இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள். வாக்குப்பதிவு டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான தொகுதிப் பங்கீடு பட்டியலை, குப்கர் கூட்டணியின் செய்தித் தொடர்பாளரும் மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவருமான சஜாத் கனி லோன் வெளியிட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டின் படி, மக்கள் மாநாட்டுக் கட்சி 5 இடங்களில் போட்டியிடவுள்ளது.

தெற்குக் காஷ்மீரின் `பாம்பே’ தொகுதியில் போட்டியிடுவதற்கு சிபிஎம்முக்கும் பிடிபிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தத் தொகுதியைப் பல முறை சிபிஎம்-ஐச் சேர்ந்த எம்.ஒய்.தரிகாமி வென்றுள்ளார்.

குப்கர் கூட்டணி பிடிபி-க்கு இடத்தை ஒதுக்கியுள்ள நிலையில், சிபிஎம் தனது வேட்பாளரை அங்கு நிறுத்துவதில் பிடிவாதமாக உள்ளது.

“‘பாம்பே’ தொகுதியில் சிபிஎம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனும் எங்களின் முடிவு கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று எம்.ஒய்.தரிகாமி தெரிவித்துள்ளார்.

“தேர்தல் நடைபெறுகிறதோ இல்லையோ, நாங்கள் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் இன்னும் தீவிரமாக வாதிட்டு வருகிறோம்” என்று தரிகாமி கூறியுள்ளார். “எங்களுக்கு ஒரு சிறிய இடத்தைக் கூட மறுப்பது நியாயம் இல்லை என்று நான் நினைக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்