ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் உச்சநீதிமன்ற நீதிபதி என்வி ரமணா, மாநில உயர்நீதி மன்றத்தின் அமர்வுகளில் தலையிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை கட்டுப்படுத்துவதாகவும், இந்த நீதிபதிகள் எதிர்கட்சியினரின் முக்கியமான சில வழக்குகளை விசாரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி ரமணா முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் சட்ட ஆலோசகராகவும், தலைமை வழக்கறிஞராகவும் இருந்ததை அந்த கடிதத்தில் ஜகன் மோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்ற ஆண்டு ஜூன் மாதம், ஆந்திர அரசு, சந்திரபாபு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்திருந்தது. இந்த குழு சந்திரபாபு அரசு சிறு, குறு விவசாயிகளிடம் நில அபகரிப்பு செய்ததாகவும், இயற்கை வளங்களை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய தொடங்கியது.
விசாரணைக்குப் பிறகு அந்த குழு அளித்த அறிக்கையில், ஏறக்குறைய 4000 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஜெகன்மோகன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா உயர்நீதிமன்ற நீதிபதிகளை கட்டுபடுத்துவது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளதாக, முதலமைச்சரின் ஆலோசகர் அஜய் கொல்லம் தி ஹிந்து விடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.