2007-ம் ஆண்டு, கொல்கத்தா மாநிலம் நந்திகிராமில் 14 பேர் படுகொலைசெய்யப்பட்ட துப்பாக்கிச்சூட்டை முன்னின்று நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சத்யஜித் பந்த்யோபத்யாய் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
2021-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி பல மூத்த மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.
17 eminent members of civil society, including senior doctors, professors, retired IPS officers & senior police officials, have joined the AITC today, to contribute in fulfilling @MamataOfficial's vision of a better Bengal. We welcome them to the family! pic.twitter.com/0DKKXLo0tB
— All India Trinamool Congress (@AITCofficial) November 7, 2020
2007-ம் ஆண்டு மேற்கு வங்க அரசு நந்திகிராம் பகுதியைச் சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவித்து, ரசாயன மையம் அமைப்பதற்காக அந்தப் பகுதியில் இருந்த 10,000 ஏக்கர் விவசாய நிலங்களை இந்தோனேசியாவைச் சேர்ந்த சலிம் குழுமத்திடம் ஒப்படைத்தது.
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் மரணமடைந்தனர் ; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மக்கள் போராட்டத்திற்குப் பிறகு இந்தத் திட்டம் அன்று மேற்கு வங்கத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியால் கைவிடப்பட்து. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
2007-ம் ஆண்டு நந்திகிராமில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை மிகக் கடுமையாக எதிர்த்த மம்தா பானர்ஜி அதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். நந்திகிராம் சம்பவத்தைத் தலைமை தாங்கி நடத்தியது மூத்த காவல்துறை அதிகாரி சத்யஜித் பந்த்யோபாத்யாய் என்பது குறிப்பிடத்தக்கது.
2007-ம் ஆண்டு நடந்த நந்திகிராம் துப்பாக்கிச்சூடு 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் எதிரொலித்தது. மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை, 34 ஆண்டுகள் நடைபெற்ற இடதுசாரிகளின் ஆட்சி 2011-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் முடிவுக்குக் கொண்டு வந்தது.
2013-ம் ஆண்டி நந்திகிராம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, அன்றைய மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யாஜியை மத்தியப் புலனாய்வு பிரிவு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என மம்தா பானர்ஜ கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “நந்திகிராமிற்குக் காவல்துறையை அனுப்பிய புத்ததேவ் பட்டாசார்யாஜி ஏன் விசாரிக்கப்படவில்லை?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
2017-ம் ஆண்டு நந்திகிராம் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புள்ளதாக சிபிஐ இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் (சத்யஜித் பாண்டியோபாத்யாய், தேபாஷிஷ் போரல்) மற்றும் ஒரு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஷங்கர் ராய் ஆகியோர் மீது குற்றம் சுமத்தியது.
காவல்துறை அதிகாரிகள் கொலை செய்ய முயற்சித்தது; ஆபத்தான ஆயுதங்களால் கடுமையான காயத்தை ஏற்படுத்தியது; ஆதாரங்கள் அழித்தது அல்லது தவறான தகவல்களை வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகளை சிபிஐ அவர்கள் மீது சுமத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
’தமிழகத்தில் என்ஐஏ கிளை – மாநில உரிமைக்கு எதிரானது’: அ.மார்க்ஸ்
இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்துக் கொல்கத்தாவில் இருக்கும் திரிணாமுல் பவனில் பல அமைச்சர்களின் முன்னிலையில் ஐபிஎஸ் அதிகாரி சத்யஜித் பந்த்யோபத்யாய் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு திரிணாமுல் காங்கிரஸில் இணைக்கப்பட்டுள்ளார். மம்தா அரசு பந்த்யோபாத்யாயை ஆதரிப்பது இது முதல் முறை அல்ல. ஏப்ரல் 31, 2018 அன்று பந்த்யோபாத்யாய் ஓய்வு பெற்ற பிறகும், அவருக்கு மாநில அரசு இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கி சிறப்பு அதிகாரியாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
டார்ஜிலிங் – பாஜக கூட்டணியிலிருந்து விலகியது கூர்க்காலாந்து கட்சி
சத்யஜித் பந்த்யோபத்யாயை திரிணாமுல் காங்கிரஸில் இணைத்தது, அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களே பெரிதும் வரவேற்கவில்லை. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் திப்யெண்டு ஆதிகாரி ”அவரைக் கட்சியில் இணைத்தது, துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியுள்ளார்.
மற்றொரு மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், “கட்சியின் இந்த முடிவை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இதைப் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தி வயர் இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.