Aran Sei

இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கு – காவல்துறையினரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி, நான்கு காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கை அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காவல்துறையினர் மீது வழக்கு தொடர மாநில அரசின் ஒப்புதலைப் பெற சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட, பர்மர், தருண் பரோட், சின்ஹால், அனஜூ சௌத்ரி ஆகிய நான்கு காவல்துறை அதிகாரிகளில் பர்மர் கடந்த மாதம் மரணமடைந்தார்.

2004 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் 19 வயதான இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணும் அவருடன் சேர்ந்து ஜாவித் ஷேக், அம்ஜத்அலி, அக்பர்அலி ராணா, சீஷான் ஜோஹர் ஆகியோர் குஜராத் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுண்டர் தொடர்பாக 2013ஆம் ஆண்டு பர்மர் உட்பட 7 காவல்துறையினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

முன்னதாகக் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் சிபிஐ தங்கள் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு முன்னர் மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தனர். இதற்கு முன்னர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கையில் மாநில அரசு அதற்கு ஒப்புதல் வழங்காது என்றும் அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அகமதாபாத் குற்றப் பிரிவைச் சேர்ந்த பர்மர் தனது துப்பாக்கியால் நான்குமுறை சுட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அப்போதைய குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியைக் கொலை செய்ய அகமதாபாத் வந்ததாகவும் கூறப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரில் பி.பி.பாண்டே, டி.ஜி.வன்சாரா, என்.கே.அமின் ஆகியோர் மீது வழக்கு தொடர மாநில அரசு அனுமதி வழங்காததைத் தொடர்ந்து அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

“பெருவாரியான மக்களின் நன்மைக்காக” காவல்துறையினர் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய மாநில அரசு, இர்ஷத் ஜஹான், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறியது.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி.ஜி.வன்சாரா மற்றும் என்.கே.அமினை விடுவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.கே.பாண்டியா, குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் முன், மாநில அரசின் ஒப்புதலைப் பெறமுடியுமா என்பது குறித்து சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

“அனுமதியின்றிக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்வது சட்டப்படி தவறு. ஆகவே, வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  சிபியை அனுமதியைப் பெற வேண்டும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி பெறுவது தொடர்பாகச் சட்டப்படி அவர்களின் நிலையை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும்” என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள்” என்றே நீதிபதி தெரிவித்ததாகவும், “குற்றம்சாட்டப்பட்ட மனுதாரர்” என்று நீதிபதி குறிப்பிடவில்லை என்பதை, தற்போது தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த காவல்துறை அதிகாரிகளின் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே, ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு தங்களுக்கும் பொருந்தும் என்று அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்