Aran Sei

பன்னாட்டு முதலாளிகளுக்கான தொழிலாளர் மசோதாக்கள்: ஜி.ராமகிருஷ்ணன்

Image Credits: NDTV

டந்த சனிக்கிழமையன்று தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு மசோதா 2020, தொழில்துறை உறவுகள் குறியீடு மசோதா 2020 மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான குறியீடு மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களை அமைச்சர் சந்தோஷ் கங்வார் அறிமுகப்படுத்தினார். இம்மசோதாக்கள் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதாக்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை அதிகரிக்கும் என்று அரசு முன்மொழிகிறது. அதே சமயம், அரசு அனுமதியின்றி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் பணிநீக்கம் செய்யவும் முதலாளிகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்படும் என்றும் முன்மொழிந்துள்ளது.

2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பதிப்புகளையும், கடந்த சனிக்கிழமையன்று, கங்வார் திரும்பப் பெற்றார். குழுவின் 233 பரிந்துரைகளில் 74%-ஐ அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

மூன்று மசோதாக்களும் அரசாங்கத்தின் தொழிலாளர் சட்ட சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும், அவற்றில் முதலில், ஊதியங்கள் குறியீடு மசோதா 2019-ல் நிறைவேற்றப்பட்டது என்று தி இந்துவில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. 29 தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக இணைக்கப்பட உள்ளன என்று கங்வார் கூறியுள்ளார்.

மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு 30 நாட்களுக்கு முன் அவற்றைப் பொதுத்தளங்களில் பகிர்ந்து கருத்து கேட்க வேண்டும் எனும் முன்-சட்ட ஆலோசனைக் கொள்கை, 2014 பிப்ரவரியில் அமல்படுத்தப்பட்டது. இம்மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு முன் இதைப் பின்பற்றவில்லை என்று கூறி காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மசோதாக்கள் நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்புடைய அனைவரும் மீண்டும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மனீஷ் திவாரி கூறியுள்ளார்.

இந்த மசோதாக்கள் ‘நீதித்துறை பரிசீலனையை’ எதிர்கொள்ளக்கூடும் என்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் கூறியுள்ளார். கொரோனா பேரிடர் காரணமாக முந்தைய நிலைக்குழு கூட்டங்களில் பல எம்பி-க்கள் கலந்து கொள்ள முடியாததால் மசோதாக்களை நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று சிபிஎம் எம்.பி. ஏ.ஆர்.ஆரிஃப் கூறியிருந்தார்.

இவ்வாறான எதிர்ப்புகள் இருந்தபோதும், நேற்று 8 மாநிலங்களவை எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய திட்டங்கள்

தொழில்துறை உறவுகள் குறியீடு மசோதா 2020-ல், வேலைநிறுத்தம் செய்வதற்கான தொழிலாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் கூடுதல் நிபந்தனைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வேலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றால் 60 நாட்களுக்கு முன் அதைக் குறித்து நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

நிறுவனங்கள் எந்தவொரு அனுமதியுமின்றி பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யும் வரம்பு இப்போது 100 ஆக உள்ளது. சில மாநிலங்கள் ஏற்கனவே இந்த வரம்பு 300 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், இந்த மசோதா இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் இதற்கான வரம்பை 300 ஆக உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் 300 தொழிலாளர்கள் வரை உள்ள தொழில்துறை நிறுவனங்கள் நிலை உத்தரவை வழங்காமல் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யலாம். இது தொழிலாளர்களுக்கு பாதகமான சூழலை உருவாக்க உதவும் என்று இந்தியன் எஸ்பிரஸ்ஸில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது.

ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இந்த வரம்பை முன்னரே 300 ஆக உயர்த்தியன, இதன் மூலம் “வேலைவாய்ப்பு அதிகரித்து பணிநீக்கம் குறைந்துள்ளது” என்று தொழிலாளர் அமைச்சகம் கூறுகிறது.

தொழிலாளர் சட்டத்திருத்தம்

இந்த ஆண்டு மே மாதம் உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், தொழிலாளர்கள் சட்டங்களை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தன. இந்த மாற்றங்களினால் தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரித்தது.

மொத்தம் இருந்த, 44 சட்டங்கள், நான்கு சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதிலும், மாநிலங்களுக்கு இடையூறாக உள்ள சில சட்டப் பிரிவுகளை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க, சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இதனால், தொழில் நிறுவனங்களுக்கு அதிக முதலீடு கிடைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும் என்று அரசாங்கம் நம்பியது.

மே 20-ம் தேதி, ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த, பாரதிய மஜ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) இந்தத் தொழில் சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. மே 22 அன்று, 10 மத்திய தொழிற்சங்கங்கள் (சி.டி.யு) மற்றும் பல்வேறு துறைகளில் செயல்படும் கூட்டமைப்புகளும் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தின.

வலுக்கும் எதிர்ப்பு

Image Credits: DC
Image Credits: DC

இதுகுறித்து அரண் செய்யுடன் பேசிய சிதம்பரம் தொகுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் “இது போன்ற சட்டங்களை மாநில அரசுகள் கொண்டு வருவதையே நங்கள் ஒப்புக்கொள்வதில்லை. இப்போது கார்ப்பரேட்டுகள் என்ன சொல்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றுகிறார்கள். வேலை நேரத்தை 12 மணி நேரம் வரை உயர்த்தியுள்ளார்கள். மத்திய அரசு தொழிலதிபர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது,” என்று கூறினார்.

Image Credits: The Hindu
Image Credits: The Hindu

சிபிஎம்-ன் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அரண் செய்யுடன் பேசும்போது “புதிய தாராளமய பொருளாதார கொள்கையைக் கொரோனா காலகட்டத்துக்குள் நிறைவேற்றிவிட வேண்டும் என இவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் தாக்கும் இம்மசோதாக்கள் சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்பந்தம், இதில் கார்ப்பரேட்டுகளுக்கான நலன் அடங்கியுள்ளது,” என்று கூறினார்.

“இது பன்னாட்டு முதலாளிகள் வசம் தொழிலையும் விவசாயத்தையும் ஒப்படைக்கும் மோசமான செயல். கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஏற்கனவே பெரும்பாலானோர் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள். இப்போது இந்த மசோதாக்களை நிறைவேற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, “பணிநீக்கத்திற்கான வரம்பை 300 ஆக உயர்த்தியுள்ளார்கள். ஆனால், பெரும்பாலான தொழிற்சாலைகளில் 300-க்கும் குறைவான ஊழியர்கள்தான் இருப்பார்கள். இது முதலாளிகளின் வசதிக்கு உகந்ததே நலனே தவிர தொழிலாளர்களின் நலனுக்கு எதிரானது” என்றும் அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்