Aran Sei

போலீஸ் துப்பாக்கிச் சூடும், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளும் – தி கார்டியன் ரிப்போர்ட்

Image Credit : theguardian.com

டந்த வாரம் நடந்த போராட்டங்களின் போது டெல்லி காவல்துறையினர், ஒரு விவசாயியை தலையில் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி செய்தி வெளியிட்டதற்காக குறைந்தது ஒன்பது மூத்த இந்திய ஊடகவியலாளர்கள் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது 25 வயது நவரீத் சிங் இறந்ததில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று டெல்லி போலீசார் மறுத்துள்ளனர் .

இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 15 ஏக்கர் நிலத்தை வைத்திருந்த நவரீத் சிங், நவம்பர் முதல் டெல்லி எல்லையில் முகாமிட்டிருந்த லட்சக்கணக்கான விவசாயிகளில் ஒருவராக இருந்தார், அவர்கள் புதிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று போராடி வருகின்றனர். அந்தச் சட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை பெரு நிறுவனங்களின் தயவில் விட்டு விடும் என்று கூறுகிறார்கள்.

ஜனவரி 26 அன்று, சர்ச்சைக்குரிய புதிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், டிராக்டர்கள் மீது ஏறி தடைகளை தாண்டி நகர மையத்திற்குள், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்குள் புகுந்த போது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவரும், போலீஸ் வைத்திருந்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு செல்ல தனது டிராக்டரைப் பயன்படுத்தியவர்களில் ஒருவருமான நவரீத் சிங், அவரது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் இறந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும், நவரீத் சிங்கின் உடலின் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும், பிரேத பரிசோதனை அறிக்கையும், அவரது தலையில் குறைந்தது ஒரு உயிர்க்கொல்லும் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதை  சுட்டுவதாக என்று ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் படமாக்கப்பட்ட சாட்சிகளும்,  அவரது உடலை பரிசோதித்த நவரீத் சிங்கின் குடும்பத்தினரும், டிராக்டரை தடைகள் வழியாக ஓட்டிச் சென்றபோது போலிசார் அவரைச் சுட்டதில் நவரீத் சிங் இறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். நவரீத் சிங் துப்பாக்கிக் குண்டால் தாக்கப்பட்ட பின்னரே டிராக்டர் கவிழ்ந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும், பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஆய்வு செய்த, நோயியல் நிபுணர் டாக்டர் பசில் பர்டூ: “இதற்கு மாறான ஆதாரம் இல்லை என்றால், என்னைப் பொறுத்தவரை இது ஒரு துப்பாக்கிச் சூட்டு காயம் அல்லது இரண்டு காயமாகவும் இருக்கலாம்.” என்கிறார். டாக்டர் பசில் பர்டூ இங்கிலாந்தின் உள்துறை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்.

டிராக்டர் கவிழ்ந்ததால் நவரீத்சிங் இறந்தார் என்பது நம்பமுடியாதது என்று அவர் கூறுகிறார். “கீழே விழுவதிலிருந்து இத்தகைய காயங்களை ஒருவர் பெற முடியாது,” என்று அவர் கூறினார்.

நவரீத் சிங் சுடப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த விவசாயிகள் முதலில் குற்றம் சாட்டினர். கார்டியன் பெற்ற உள்ளூர் பஞ்சாபி தொலைக்காட்சி நிலையத்தின் வீடியோ ஒன்று சம்பவம் நடந்த பிறகான உடனடி குழப்பமான சூழலை காட்டுகிறது.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தாங்கள் கண்டதை விவரிக்கிறார்கள்.

“போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர், முகத்தில் சுட்டுக் கொன்றனர், அவர் உடனே கொல்லப்பட்டார்” என்று ஒரு பெண் கூறுகிறார்.

ஒரு ஆண் “முதலில் அவர் சுடப்பட்டார், பின்னர் டிராக்டர் கவிழ்ந்தது.” என்கிறார்.

ஒரு இளம் சீக்கிய விவசாயி நவரீத் சிங்கை அடையாளம் காட்டுகிறார்: “நவரீத் என்பது இந்த இளைஞரின் பெயர். அவர் தலையில் சுடப்பட்டுள்ளார்.”

குற்றச்சாட்டுகள் வெளிவந்த சிறிது நேரத்திலேயே, நவரீத் சிங் தனது டிராக்டரில் கவிழ்ந்து விழுந்து இறந்துவிட்டதாக நிரூபிப்பதற்கான வீடியோ காட்சிகளை போலிசார் வெளியிட்டனர். பிரேத பரிசோதனை துப்பாக்கிச் சூட்டைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும், மரணத்திற்கு அதிகாரபூர்வ காரணம் தலையில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்பட்ட “அதிர்ச்சியும் ரத்தக்கசிவும்” என்று அவர்கள் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், துப்பாக்கிச் சூடு இருட்டடிப்பு செய்யப்பட்டதாக நவரீத் சிங்கின் தாத்தா ஹர்தீப் சிங் திப்திபா குற்றம் சாட்டியுள்ளார்.

“என் பேரன் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார், ஆனால் ஒரு துப்பாக்கி குண்டு அவரைக் கொன்றது என்று தங்களால் எழுத முடியாது என்று மருத்துவமனையில், ஒரு மருத்துவர் என்னிடம் கூறினார்,” என்று ஹர்தீப் சிங் திப்திபா கூறுகிறார்.

பிரேத பரிசோதனையின் போது நவரீத் சிங்கின் உடலுக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே-வை வழங்குவதற்கு மருத்துவமனை மறுத்துவிட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ராம்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சீவ் யாதவ், குடும்பத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தி கார்டியனிடம் கூறி விட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி கேட்ட கார்டியனின் கோரிக்கைக்கு டெல்லி போலீசார் பதிலளிக்கவில்லை.

இந்தச் செய்தியை வெளியிட முயற்சித்த இந்திய ஊடகங்கள் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டன. துப்பாக்கிச் சூடு குற்றச்சாட்டுகள் பற்றிய செய்திகளை வெளியிட்ட ஒன்பது ஊடகவியலாளர்கள் அல்லது அவற்றைப் பற்றி ட்வீட் செய்தவர்கள் மீது ஐந்து மாநிலங்களில் தேசத் துரோக குற்றச்சாட்டுகள் உட்பட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி அரசியல்வாதி சசி தரூர் குற்றச்சாட்டுகள் குறித்து ட்வீட் செய்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களில் நீண்ட வடிவிலான கட்டுரைகளைக் கொண்ட நடப்பு விவகார இதழான கேரவனின் ஆசிரியர் வினோத் ஜோஸ்-ம் சுயேச்சையான ஆன்லைன் செய்தி இணையதளமான TheWire.in இன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனும் அடங்குவர்.

“எனக்கு எதிரான இந்த வழக்கு கேலிக்குரியது, அது நிற்காது, ஆனால் அரசாங்கம் உண்மையிலேயே விரும்புவது என்னவென்றால், இறந்தவரின் குடும்பம் தனது கூற்றுக்களையும் கேள்விகளையும் மீண்டும் எழுப்பாமல் அவர்களை வாயடைக்கச் செய்வதைத்தான்” என்று சித்தார்த்த வரதராஜன் கூறினார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் பத்திரிகையாளர் கன்வர்தீப் சிங், குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியை வெளியிட்டதிலிருந்து, அவர் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் குறுஞ்செய்திகள் அச்சுறுத்தப்பட்டதாகவும், அவரது தொலைபேசி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்

“நான் எழுதுவதை நிறுத்திவிட்டு பாதுகாப்பாக இருக்கலாம் அல்லது என் மீதமுள்ள வாழ்க்கையை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் வாழ தயாராக வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் மூலம் எனக்கு தகவல் அனுப்பபடுகின்றது.” என்று அவர் கூறினார். “அரசாங்கம் எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ எந்த அளவிலும் தீங்கு விளைவிக்க முயற்சிக்கக்கூடும் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் விசாரணையை தொடர்வேன்.” என்கிறார் அவர்.

இறந்த விவசாயியின் குடும்பத்தினர் தங்கள் வழக்கை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, பலர் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாட்சிகள் முன் வருவதற்கு அஞ்சுகிறார்கள் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தி கார்டியன் தளத்தில் வெளியான செய்தி அறிக்கையின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்