Aran Sei

விவசாயிகள் போராட்டம் பற்றிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் – ஒரு சார்பானது என்று இந்தியா கண்டனம்

Image credit - tweeted video

ந்திய அரசின் மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் குறித்தும் இந்தியாவில் ஊடக சுதந்திரம் குறித்தும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் நேற்று நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி இந்திய அரசு அதனை கண்டனம் செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ஆசியாவுக்கான ஐக்கிய முடியரசின் துணை அமைச்சர் நீகல் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற விதிகளின்படி, 1 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெற்ற மனுக்கள் மீதான விவாதம் நடத்தப்படும். அதன்படி, தாராளவாத கட்சி உறுப்பினர் குர்ச் சிங் உருவாக்கிய, “எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பையும் பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும்படி இந்திய அரசை வலியுறுத்தவும்” என்ற மனு 1.15 லட்சம் கையெழுத்துகளை பெற்றதைத் தொடர்ந்து நேற்று இந்த விவாதம் நடைபெற்றது.

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம், ஊடக சுதந்திரம் – பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வரும் திங்கள் அன்று விவாதம்

வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் நடந்த இந்த விவாதத்தில் பேசிய 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் இந்திய ஜனநாயகத்தை தாக்கி பேசினர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

இந்த விவாதத்தில் சில உறுப்பினர்கள் வீடியோ இணைப்பு மூலமும், மற்றவர்கள் நேரடியாகவும் கலந்து கொண்டனர் என்று தி ஹிந்து கூறுகிறது.

விவாதத்தின் போது ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி உறுப்பினர்களும் போராடும் விவசாயிகள் நடத்தப்படுவது குறித்தும், ஊடகங்கள் மீதான அடக்குமுறை பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்தும், இணைய இணைப்பு துண்டிக்கப்படுவது, செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது ஆகியவற்றையும் கண்டனம் செய்தனர் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜித் சிங் இந்த விவாதத்தில் தான் பேசிய வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.

“மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், அறிவுத்துறை சுதந்திரம் ஆகியவை போராடி பெறப்பட்டவை. அவை உலகளாவியவை, போற்றப்பட வேண்டியவை” என்று அவர் கூறியுள்ளார்.

மேற்கு லண்டனில் உள்ள ஈலிங் சவுத்ஹால் உறுப்பினரும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவருமான வீரேந்திர ஷர்மா, “இரு தரப்பும் ஒரு ஒப்பந்தத்தை அடைவதற்கான தேவையை உணர வேண்டும். இது தொடர்பாக பிரிட்டிஷ் அரசு உதவி செய்ய முன் வந்து இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“இன்றுதான் இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப முடிந்திருக்கிறது. ஜனநாயகத்தின் சக்தியைப் பயன்படுத்தி, இந்த முக்கியமான பிரச்சினையை அரசு மறைத்து வருவதற்கு முடிவு கட்டியுள்ளோம்” என்று தாராளவாத கட்சி உறுப்பினரும் அக்கட்சியின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளருமான லய்லா மோரன் பேசியுள்ளார்.

ஆளும் பழமைவாத கட்சி உறுப்பினர் தெரசே வில்லியர்ஸ், விவசாயச் சீர்திருத்தம் உலகெங்கிலும் சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது என்பதை குறிப்பிட்டு, இந்தியாவின் புதிய விவசாயச் சட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த விவாதம் முடிந்த சிறிது நேரத்தில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த விவாதம் ஒரு சார்பாக நடந்ததாகவும், உண்மைகளை அடிப்படையாக கொண்டிராத பொய் கூற்றுகள் சொல்லப்பட்டதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மீதும் அதன் நிறுவனங்களின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

“விவசாயக் கொள்கை இந்திய அரசாங்கத்தின் உள்நாட்டு விவகாரம். எந்த ஒரு ஜனநாயகத்துக்கும் பேச்சு சுதந்திரமும், அமைதியாக போராடும் உரிமையும் இன்றியமையாதவை என்று ஐக்கிய முடியரசு கருதுகிறது. அதே நேரம், போராட்டம் சட்டத்தை மீறினால், சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் உரிமை பாதுகாப்புப் படைகளுக்கு உள்ளது” என்று அமைச்சர் நீகல் ஆடம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்