Aran Sei

பாகிஸ்தான் பிரதமர் பிதற்றுகிறார்: ஐ.நா.வின் இந்திய பிரதிநிதி விமர்சனம்

Image Credits: Nagaland Page

75 வது ஐக்கிய நாடுகள் சபையின் பொது குடத்தில் (யுஎன்ஜிஏ) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரையை இந்தியப் பிரதிநிதி மிஜிடோ வினிட்டோ விமர்சித்துள்ளார்.

இம்ரான் கானின் கருத்துக்கள் “முழுதும் பொய்யாகவும், தவறான தகவலாகவும், போரை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது” என்று மிஜிடோ கூறியுள்ளார்.

ஐ.நா.வில், இம்ரான் கானின், முன்பே பதிவுசெய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டது. காஷ்மீர் பிரச்னை குறித்து அவர் பேசியது ஒளிபரப்பாகும்போது மிஜிடோ அவையைவிட்டு வெளியேறினார். பின்னர் ஐ.நா.விடம் ‘பதில் உரிமை’ வழங்கக்கோரி மிஜிடோ அவரது கருத்துக்களை தெரிவித்தார்.

இம்ரான் கான் தனது உரையில், ​​காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார் மற்றும் இந்திய அரசாங்கத்தை விமர்சித்தார். அவரது சமீபத்திய உரைகளில் இதுகுறித்து அதிகமாகப் பேசி வருகிறார்.

“ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கமுடியாத பகுதி. காஷ்மீரில் கொண்டுவரப்படும் விதிகள் மற்றும் சட்டங்கள் இந்திய நாட்டின் உள்நாட்டு விவகாரம். காஷ்மீரில் எஞ்சியிருக்கும் ஒரே தகராறு அதன் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக அக்கிரமித்திருப்பது மட்டும் தான். பாகிஸ்தான் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து பகுதிகளையும் காலி செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று மிஜிடோ கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு பதிலளிக்கும் போது “ஜூலை மாதம் தனது நாடாளுமன்றத்தில் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ஒரு ‘தியாகி’ என்று குறிப்பிட்டவர் தான் இம்ரான் கான்” என்று மிஜிடோ கூறியுள்ளார்.

“இந்த சபை இப்போது, தன்னை பற்றி பெருமையாக கட்டிக்கொள்ள எதுவும் இல்லாத, பேசுவதற்கு எந்த சாதனைகளும் இல்லாத, உலகுக்கு வழங்குவதற்கான நியாயமான ஆலோசனையும் இல்லாத ஒருவரின் இடைவிடாத பிதற்றலை கேட்டது” என்று மிஜிடோ கூறியுள்ளார்.

மேலும் பேசுகையில் “பாகிஸ்தான் தலைவர் (இம்ரான் கான்), இந்த மாபெரும் மாநாட்டில் இன்று பயன்படுத்திய வார்த்தைகள் ஐக்கிய நாடுகள் சபையை இழிவுபடுத்துகின்றன,” என்றும் கூறினார்.

“39 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த மக்களையே கொன்று இனப்படுகொலையில் ஈடுபட்ட நாடு இது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது செய்த கொடூரங்களுக்கு நேர்மையாக மன்னிப்பு கேட்காத அளவுக்கு வெட்கமில்லாத நாடு இது. அச்சமடைந்த, பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அரசு நிதியில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் நாடு இது. ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட பல பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் சந்தேகத்துக்குரிய வேறுபாட்டைக் கொண்ட நாடு இது,” என்றும் மிஜிடோ பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டினார்.

முன்னதாக, “பாகிஸ்தான் எப்போதும் அமைதியான தீர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, 2019 ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், ஜம்மு-காஷ்மீரில் இராணுவ முற்றுகை மற்றும் பிற மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று இம்ரான் கான் கூறினார்.

இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது கூட்டத்தில் (யுஎன்ஜிஏ) உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்