Aran Sei

மனிதவள மேம்பாட்டு குறியீடு – இந்தியா 2 இடங்கள் பின்தங்கி 131-வது இடத்தில்

Image Credits: The Wire

ந்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா முன்பு இருந்ததை விட இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. தற்போது, 189 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தில் உள்ளது.

இருப்பினும், ஒவ்வொரு தேசத்தின் வளர்ச்சியால் ஏற்படும் அழுத்தங்களை மதிப்பிடும் வகையில்  இந்த ஆய்வைச் சரி செய்தால்,  தரவரிசையில் இந்தியா எட்டு இடங்கள் உயரும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதன்முறையாக, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme) ஒவ்வொரு நாட்டின் தனிநபர் கார்பன் உமிழ்வு (per-capita carbon emissions) மற்றும் அதன் பொருள் தடம் (material footprint) ஆகியவற்றால் ஏற்படும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய அளவுகோலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது புதைபடிவ எரிபொருள்கள், உலோகங்கள் மற்றும் பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற வளங்களை அளவிடும். இது மனித முன்னேற்றத்தின் தெளிவான மதிப்பீட்டை வழங்கும் என்று ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் இந்திய பிரதிநிதி ஷோகோ நாடா கூறியுள்ளார்.

மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் முதலிடம் வகிக்கும் நோர்வே, இந்த அளவுகோலை பயன்படுத்தினால் 15 இடங்கள் வீழ்ச்சி அடையும், அயர்லாந்து பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.

புற அழுத்தங்கள்-சரிசெய்யப்பட்ட மனிதவள மேம்பாட்டு குறியீட்டு எண் (pressure-adjusted human development index) எனும் இந்தப் புதிய அளவுகோலை பயன்படுத்தினால், ‘மிக உயர்ந்த மனித மேம்பாட்டுக் குழு’ பிரிவில் உள்ள 50 நாடுகள் அதிலிருந்து வெளியேறி விடும்.

இதை பயன்படுத்தினால் தரவரிசையில் ஆஸ்திரேலியா 72 இடங்களும், அமெரிக்கா 45 இடங்களும் கனடா 40 இடங்களும் விழும். இது இயற்கை வளங்களில் அவற்றின் ஏற்றத்தாழ்வான தாக்கத்தைப் பிரதிபலிக்கும். எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த வளைகுடா நாடுகளும் கடுமையாகச் சரியும். தற்போது 85-வது இடத்தில் இருக்கும் சீனா 16 இடங்கள் சரியும்.

“இயற்கை வளங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தாமல் எந்தவொரு நாடும் இதுவரை மிக உயர்ந்த அளவிலான வளர்ச்சியை அடைய முடியவில்லை. இதை சரியாகச் செய்யும் முதல் தலைமுறையாக நாம் இருக்க வேண்டும்” என்று ஷோகோ நாடா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில், இந்தியாவின் ஒரு நபருக்கான ஆண்டு வருவாய் 2018-ல் $6,829-லிருந்து 2019-ல் $6,681 (சுமார் ரூ 5.12 லட்சத்திலிருந்து ரூ 5.01 லட்சம்) ஆக சரிந்துள்ளது என்று தி ஹிந்து வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்