Aran Sei

இந்திய – சீன எல்லை தகராறு : தீர்வு எப்போது?

credit: pragativadi.com

ந்திய-சீன எல்லையில் அமைதியை உருவாக்குவதற்கு இரு நாட்டு ராணுவ தளபதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடந்து. இந்த கூட்டத்தில் கூடுதாலாக இராணுவ வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று இரு தரப்பும் கருத்தொற்றுமையை எட்டியுள்ளன.

இந்திய,  சீன வெளியுறத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு செப்டம்பர் 10-ம் தேதி மாஸ்கோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் இரு நாடுகளும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவனங்களை பின் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டனர்.

இது மாஸ்கோவில் நடந்த சந்திப்புக்கு பிறகு நடக்கும் முதல் சந்திப்பு ஆகும். இந்த பேச்சுவார்த்தை பதினான்கு மணி நேரம் நீடித்தது.

இந்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மால்டோவில் நடந்தது. இந்திய தரப்பில் லே பகுதியின் தளபதி ஹரிந்தர் சிங் தலைமையில் 14 அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் முதல்முறையாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியும் கிழக்காசிய பகுதிகளுக்கான இணை செயலாளருமான நவீன் ஸ்ரீவத்சவாவும் கலந்து கொண்டார். சீனா தரப்பை தென் ஜிங்ஜியாங் ராணுவ பகுதியின் தளபதி தலைமை தாங்கினார்.

இந்த பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை மாலை வரை நீடித்தது. அதன், முடிவில் இரு நாட்டு இராணுவ தளபதிகளும் இணைந்து கூட்டு செய்தி அறிக்கையை வெளியிட்டனர்.

அந்தச் செய்தி அறிக்கையில், இரு நாட்டு தலைவர்களும் வந்தடைந்துள்ள கருத்தொற்றுமைகளை முனைப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் எல்லையில் ராணுவங்களுக்கு இடையிலான தகவல் தொடர்புகளை பலப்படுத்த வேண்டும் என்றும் நிலைமைகளை தவறாக மதிப்பீடு செய்யப்படுவதையும் தவறான புரிதல்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது.

இரு நாட்டு ராணுவமும் எல்லைக்கு கூடுதலாக படைகளை அனுப்புவதை நிறுத்துகிறோம் என்றும் கள நிலைமைகளை ஒருதலைபட்சமாக மாற்ற மாட்டோம் என்றும் ஒப்புக்கொண்டன.

அதேபோல், எல்லையில் நிலைமைகளை சிக்கலாக்கக்கூடிய நடவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

இந்த கூட்டு செய்தி அறிக்கையில், லடாக்கில் சீனா ஆக்கிரமித்துள்ள இடங்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றி எதுவுமே கூறபடவில்லை என்றும் இரு நாடுகளும் தங்களது படைகளை விலக்கி கொள்வதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தி வையர் இணையதளம் குறிப்பிடுகிறது.

வெகுவிரைவில் இரு நாட்டு ராணுவ தளபதிகளுக்கு மத்தியில் ஏழாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்