Aran Sei

இந்திய-சீன எல்லை தகராறு: 45 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த துப்பாக்கி

இந்திய சீன எல்லையில் நேற்று இரு நாட்டு இராணுவமும் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டன. இதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றசாட்டிக்கொண்டன.

கடந்த மே மாதத்தில் இருந்து இந்திய சீன எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. எல்லையின் தகராறின் உச்சமாக ஜூன் மாதம் லடாக்கின் லக்வான் பள்ளதாக்கில் சீன ராணுவ வீரர்கள் தாக்கியதில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பில் எத்தனை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் குறிப்பிடுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும், இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தகைகள் நடத்தின. அதன் விளைவாக லடாக் பகுதியிலிருந்து சீன வீரர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் பின்வாங்கினர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 28 அன்று சீனா மீண்டும் நூற்றுக்கணக்கான இராணுவ வீர்ர்களை, லாடாக்கின் பான்காங் ஏரி பகுதியில் குவிக்கத் தொடங்கியது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஹெல்மெட் டாப் பகுதிக்கு தெற்கில் சில கிலோமீட்டர் தொலைவில் மக்கள் விடுதலை இராணுவம் (சீன இராணுவம்) அத்துமீறி நுழைய முயற்சி செய்ததை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக தடுத்தனர் என்றும் இந்த நடவடிக்கையில் எல்லை பாதுக்காப்பு சிறப்பு படையை சேர்ந்த இந்திய இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளர் என்றும் மற்றொரு வீரர் படுகாயம் அடைந்துள்ளார்

இந்த சூழ்நிலையில் எல்லையில் நிலவிவரும் பதற்றத்தை குறைக்க மற்றும் படைகளை எல்லையில் இருந்து இரு நாடுகள் விலக்கி கொள்ளவது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் ஃபெங்க் கடந்த வெள்ளி அன்று (செப்டம்பர் 4) மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டதிற்கிடையே சந்தித்தனர். எல்லை பிரச்சனைத் தொடர்பாக நடைபெற்ற முதல்கட்ட உயர்நிலை கூட்டம் இது. இப்பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கி இரண்டு மணி நேரங்கள் நீடித்தது. இந்த கூட்டத்தில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிடுகிறது.

ஒருபுறம் அரசியல், ராஜிய தளங்களில் இரு நாடுகளும் எல்லை பிரச்சனையை தீர்க்க முயன்றுக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று எல்லையில் இரு நாட்டு இராணுவமும் வான் நோக்கி துப்பாகியால் சுட்டுக்கொண்டன. இது கடந்த 45 ஆண்டுகளில் முதல்முறையாக நடந்த துப்பாகிச் சூடு என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் குறிப்பிடுகிறது.

இந்த சம்பவம் இந்திய சீன எல்லை பிரச்சனையை புதிய கட்டத்துக்கு நகர்த்தி உள்ளது என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன படிப்புகள் துறை பேராசிரியர் ஸ்ரீகாந்த கொண்டபள்ளி கூறியதை மிண்ட் நாளேடு கூறிப்பிடுகிறது.

எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி சீன இராணுவம் செவ்வாய் கிழமை அறிக்கை வெளியிட்டது. அதில், இந்திய இராணுவம் முதலில் சுட்டது என்றும் இந்தியா தனது படைகளை பின்வாங்க வேண்டும் என்றும் கூறிப்பிட்டுள்ளது.

இதன் பின் இந்திய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சீன இராணுவம்தான் முதலில் இந்திய நிலைகளை நோக்கி சுட்டது என்றும் இந்திய இராணுவம் எல்லையில் அத்துமீறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஒருபக்கம் அரசியல், இராஜிய பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டே மறுபக்கம் சீனா எல்லை பகுதியில் வெளிப்படையாக அத்துமீறுகிறது என்றும் கூறியுள்ளது.

இந்தியா அமைதியான முறையில் பேச்சுவார்த்தகைகள் மூலம் எல்லை பிரச்சனையை தீர்த்துக்கொள்ள தயாராக உள்ள அதேநேரத்தில் இந்தியாவுக்கு சொந்தமான ஒரு அங்குள அளவு இடத்தைக் கூட விட்டுக்கொடுக்காது என்று இந்திய ராணுவம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தரப்பில் கூறப்பட்டதை சீனாவின் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் சூ லீஜின் மறுத்துள்ளதுடன் இரு நாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையின் மூலமாக எல்லை பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிப்பிட்டுள்ளர்.

இந்திய சீன எல்லையில் நிலவிவரும் இராணுவ பதற்றத்தை குறைக்கவும் அமைதியான முறையில் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்க் வீயும் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பாக செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கிடையே சந்திக்க உள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்