Aran Sei

உத்தர பிரதேசம் – போராடும் விவசாயத் தலைவர்களுக்கு ரூ 50 லட்சம் நோட்டீஸ்

யோகி ஆதித்யநாத்

த்தர பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தின் வட்டாட்சியர், விவசாயத் தலைவர்கள் ரூ 50 லட்சத்துக்கான தனிநபர் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘ஒன்றிய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளை தூண்டி விடுவதை’ தடுப்பதற்காக அவர் இதை அனுப்பியுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

ஒன்றிய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வரும் நிலையில், பாஜகவின் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக ஆட்சி புரியும் உத்தர பிரதேசத்தில் விவசாய தலைவர்கள் மிரட்டப்படும் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது

தலா ரூ 50 லட்சம் உறுதிமொழி பத்திரம் கொடுக்குமாறு கேட்கும் இந்த நோட்டிஸ், பாரதிய கிசான் யூனியன் (அசலி)-ஐச் சேர்ந்த 6 விவசாயத் தலைவர்களுக்கு அனுப்பபட்டுள்ளது. ரூ 5 லட்சம் மதிப்பிலான உறுதிமொழி பத்திரத்தை கேட்கும் நோட்டிஸ் இன்னும் 6 விவசாயத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சந்தவுசி மற்றும் சிங்பூர் பகுதிகளைச் சேர்ந்த இந்த விவசாயத் தலைவர்கள் நவம்பர் 26 முதலே விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்தத் தொகை, தவறாக குறிப்பிடப்பட்டு விட்டது என்றும் அது குறைக்கப்பட்டு விடும் என்றும் போலீஸ் வியாழக் கிழமை கூறியுள்ளது.

“நான் வட்டாட்சியரிடம் பேசி விட்டேன். அவர் இப்போது விடுமுறையில் உள்ளதால், அவர் திரும்பி வந்த பிறகு ரூ 50,000-க்கான புது நோட்டீஸ்கள் அனுப்பப்படும், முந்தைய நோட்டீஸ்களில் தொகை தவறாகக் குறிப்பிடப்பட்டு விட்டது” என்று சம்பல் காவல்துறை கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஷ்ரா இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறியுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 111-ன் கீழ் டிசம்பர் 12, 13 தேதிகளில், இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிரிவு 110 (வாடிக்கையான குற்றவாளிகளின் நன்னடத்தையை உறுதி செய்வது), பிரிவு 109 (சந்தேகத்துக்குரிய நபர்களின் நன்னடத்தையை உறுதி செய்வது), பிரிவு 108 (அரசுக்கு விரோதமான விஷயங்களில் நன்னடத்தையை உறுதி செய்வது), பிரிவு 107 (அமைதியை பராமரிப்பதற்கான பாதுகாப்பு) ஆகியவற்றின் கீழ் நன்னடத்தையை உறுதி செய்வதற்கு உள்ளூர் ஆட்சியர் குறிப்பிட்ட தொகையை பிணையாகக் கோரலாம்.

ஆனால், இந்த நோட்டீஸ் “ஜனநாயகரீதியான போராட்டத்தை முடக்குவதற்கான” முயற்சி என்று விவசாய தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“விவசாயிகள் போராடுவதைக் குறித்து அரசு ஏன் பயப்படுகிறது? நாங்கள் பயங்கரவாதிகள் போல ரூ 50 லட்சத்தை பிணைத் தொகையாக குறிப்பிட்டுள்ளனர். எங்களிடம் அந்த அளவு பணம் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும்” என்று பாரதிய கிசான் யூனியன் (அசலி)-ன் மாவட்ட தலைவர் ராஜ்பால்சிங் யாதவ் கூறியுள்ளார்.

“இந்த நோட்டிஸ்கள் அனுப்பப்படுவதற்கு முன்னர், போலீஸ் எங்களது கிராமங்களுக்கு வந்து எங்களை கண்காணித்து வந்தது. ஆர்ப்பாட்டம், அல்லது முற்றுகை போராட்டத்தை அறிவித்தவுடன் அவர்கள் எங்களை கைது செய்து விடுவார்கள். நவம்பர் 28-ம் தேதி நாங்கள் டெல்லிக்கு போராடச் சென்றோம்” என்கிறார் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த சஞ்சீவ் காந்தி.

“போலீஸ் வருவதற்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி, வயல்களில் தூங்கி விட்டு அடுத்த நாள் போராட்டத்துக்குச் செல்கிறோம்” என்கிறார் அவர்.

“நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், எங்குமே அரசு ரூ 50 லட்சம் பணம் கட்டு என்று மிரட்டுவதை பார்த்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க அச்சுறுத்தல்” என்று ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷ்-ஐச் சேர்ந்த ராஜ்வீர் சிங் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்