Aran Sei

‘ஐஐடி ஆசிரியர் நியமனம் : இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்’ – திருமாவளவன்

Image Credits: The Print

ந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றின் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறப்பு நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஐடி, ஐஐஎம் ஆகிய நிறுவனங்களின் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறை படுத்த வேண்டாம் என்று அரசுக்கு வல்லுநர் குழு ஒன்று பரிந்துரை அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமூகநீதியை ஒழித்துக்கட்டும் இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது. மத்திய அரசுக்குரிய கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணி நியமனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாஜக அரசை வலியுறுத்துகிறோம்!” என்று கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு விவகாரம் – பதிலளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

“ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களின்போது இடஒதுக்கீடு இல்லாத நிலை நீண்ட காலமாக நிலவி வந்தது. 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் அதற்காக மத்திய அரசால் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்தச் சட்டத்தின் பிரிவு -3 இல் கூறப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`இதுதாய்யா மநு நீதி’- இட ஒதுக்கீடு பிரச்சனையில் வலுக்கும் கண்டனங்கள்

“அந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும் கூட நிலைமை மாற்றம் அடையவில்லை. இதை அரசின் கவனத்துக்கு பாராளுமன்ற குழு கொண்டு சென்றபோது கடந்த 2019-ம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆசிரியர் நியமனங்களில் முழுமையாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துச் சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குப் பதிலாக அந்தச் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கு, இப்போது ஒரு குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூகநீதியை அழித்தொழிக்கும் இந்தப் பரிந்துரை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம்

“அதுமட்டுமன்றி, இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம்’ களில் எஸ்சி/ எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறப்பு நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்